ஓட்டு எண்ணிக்கை மையங்களில் துவங்கியது பரபரப்பு
சென்னை: தமிழகத்தில் முதல்கட்டமாக ஏப்.,19ல் லோக்சபா தேர்தல் நடைபெற்றது. இதன் ஓட்டு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு துவங்கியது. ஓட்டு எண்ணிக்கை முன்னதாக தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் வருகை தந்தனர். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூம் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டன. சில இடங்களில் பிரச்னைகளும் எழுந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சில துளிகள்..
* ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வாக்கு என்னும் மையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் போலீசார் வாக்குவாதம் ஏற்பட்டது. தபால் ஓட்டு எண்ணும் மையத்தின் உள்ளே பத்திரிகையாளர்கள் செல்ல அனுமதி மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
* விருதுநகர் லோக்சபாவின் சாத்துார் தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை சாவி சேராததால் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பூட்டை உடைக்க கலெக்டர் அறிவுறுத்தி சென்ற நிலையில் வேறொரு சாவி சேர்ந்ததும் அறை திறக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது.
* வேலூர் மற்றும் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட வாக்கு என்னும் மையத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் சரிவர செய்து தரவில்லை என அதிமுக.,வினர் வாக்குவாதம் செய்தனர்.
* நாகை லோக்சபா தபால் ஓட்டு எண்ணிக்கை 8 மணிக்கு துவங்கிய நிலையில் கேமராக்களுடன் உள்ளே சென்ற பத்திரிகையாளர்களை அனுமதிக்க மறுத்ததால், டி.ஆர்.ஓ., பேபியிடம் வாக்குவாதத்தில் பத்திரிகையாளர்கள் ஈடுபட்டனர்.
* திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் ஓட்டு எண்ணும் மையத்தில் பத்திரிகையாளர்களை அடையாள அட்டை இருந்தும் அனுமதிக்கவில்லை; இருக்கை வசதி கூட இல்லாததால் தர்ணாவில் ஈடுபட்டனர்.
* மதுரையில் தபால் ஓட்டும் எண்ணும் இடத்தில் பத்திரிகையாளர்களை அனுமதிக்க கலெக்டர் சங்கீதா மறுப்பு.
* கன்னியாகுமரி தொகுதி கோணம் ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு பகுஜன் திராவிட கட்சி வேட்பாளர் ராஜன்சிங் கத்தியுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
* ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பதிவான தபால் ஓட்டுகளில் சுமார் 30 சதவீத ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டன.
வாசகர் கருத்து