உஷார் நிலையில் தி.மு.க.,

சில நாட்களுக்கு முன், முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தது, காங்கிரசின் மறைமுக தலைவர் சோனியா. கூட்டணி கட்சி தலைவரின் அழைப்பை மகிழ்ச்சியோடு ஏற்ற ஸ்டாலினிடம், 'எங்கள் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் தோற்கும் நிலையில் உள்ளார். அதற்கு காரணம் எதிர்க்கட்சிகள் அல்ல. உங்கள் கட்சியினர் தான்' என்ற சாராம்சத்தில் பேசினார் சோனியா. அதை ஸ்டாலின் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

சோனியா அழைப்பின் பின்புலம் பற்றி, தி.மு.க., மூத்த தலைவர் ஒருவர், 'நெல்லை தொகுதிய, சபாநாயகர் அப்பாவு, அவரோட மகன் அலெக்சுக்காக கேட்டார். காங்கிரசுக்கு குடுத்ததுல அவருக்கு கடுப்பு. காங்கிரஸ் போட்ட ஆள் புரூஸ் கன்னியாகுமரிக்காரர். அதுல மொத்த மாவட்ட தி.மு.க.,வுக்கும் கடுப்பு. அதனால, யாரும் புரூஸ் தேர்தல் வேலைக்கு போய் நிக்கல. புரூஸ், ரெண்டு நாள் பேசி பாத்தாரு. ஒருத்தனும் மசியல. நேரா அவரோட மறை மாவட்டத்து தலைவருக்கு போன் போட்டாரு, உடனே சோனியா போன் வந்துட்டு', என்று சொன்னார்.

அந்த அழைப்பால் கடும் கோபமான ஸ்டாலின், அப்பாவுவை போனில் ஏசியதோடு, சமாதானமும் செய்தார். கையோடு, துாத்துக்குடியில் கனிமொழிக்காக தேர்தல் வேலை செய்யும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அழைத்து, திருநெல்வேலிக்கு போக உத்தரவிட்டார். இப்போது, நெல்லையில் புரூசுக்காக வேலை செய்கிறார் அனிதா.

புகார் மேல் புகார்



வேட்பாளர்கள் உறுதியாகி களத்தில் இறங்கிய பின், சோனியா மட்டும் அல்ல, ஸ்டாலினிடம் கூட்டணி கட்சியினர் பலரும் புகார் செய்கின்றனர். சில இடங்களில் தி.மு.க., வேட்பாளர்களுமே புகார் செய்கின்றனர்.

திருச்சியில் வைகோவின் மகன் துரைக்கு, லோக்கல் தி.மு.க.,வினர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற தகவலை வைகோ சொல்ல, உள்ளூர் அமைச்சர்கள் நேரு மற்றும் மகேஷிடம் பேசி, 'துரையை வெற்றி பெற வைக்க வேண்டியது உங்கள் கடமை' என உத்தரவிட்டார். விளைவாக, துரையை ஜெயிக்க வைக்க நேருவும் மகேஷும் மும்முரமாக வேலை பார்க்கின்றனர்

விழுப்புரம் தொகுதியில் வி.சி., பொதுச் செயலர் ரவிக்குமார் போட்டியிடுகிறார். அவர் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர். தொகுதியில் தான் சந்திக்கும் போராட்டங்களை, ஸ்டாலினிடம் விவரித்துச் சொல்ல, அங்கேயும் ஸ்டாலின் தலையிட்டு நிலையை சரி செய்தார்

ராமநாதபுரம் நிலவரத்தை கேட்ட ஸ்டாலின், 'நவாஸ்கனி வெற்றி பெறவில்லை என்றால் உங்கள் பதவி பறிக்கப்படும்' என்று ராஜகண்ணப்பனை எச்சரித்தார்

ஸ்டாலினிடம் இருந்து இப்படி ஒரு அழைப்பை பெற்ற தேனி பொறுப்பாளர் அமைச்சர் மூர்த்தி, 'நம் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஜெயித்தே ஆகவேண்டும், இல்லையெனில் என் பதவி பறிபோகும்' என்று, மாவட்ட தி.மு.க.,வினரிடம் சொல்லி வருகிறார்.

இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு கதை இருக்கிறது.

ஸ்டாலின் பிரசார சுற்றுப்பயணத்தில், பிரசாரத்திற்கு பின் பெரும்பாலான நேரத்தை மாவட்ட கட்சி நிர்வாகிகளை எச்சரிப்பதிலும் ஊக்கப்படுத்துவதிலும் தான் செலவு செய்கிறார் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர், கூட்டணி கட்சி தொகுதி உட்பட ஒவ்வொரு தொகுதிக்கும் இவ்வளவு கவனம் செலுத்தி வருவது கட்சியினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த கவனத்திற்கு காரணம், மாறி வரும் கள நிலவரம் தான் என்கின்றனர்.

தேர்தல் பருவம் தொடங்குவதற்கு முன் தி.மு.க., 39/39 எடுக்கும் என்ற தோற்றம் தான் அனைவர் மத்தியிலும் இருந்தது. ஆனால், நிலைமை அவ்வளவு சீராக இல்லை, வேகமாக மாறி வருகிறது என்று, ஸ்டாலினிடம் கொடுக்கப்படும் உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 39/39 என்று இல்லாவிட்டாலும், 35 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றினால் தான், அடுத்த இரண்டு ஆண்டுகளை சுமுகமாக கடத்த முடியும், 2026ஐ தைரியமாக சந்திக்க முடியும் என்று ஸ்டாலின் எண்ணுகிறார். அதனால், உளவுத்துறை அறிக்கைகள் அவரை கவலையில் ஆழ்த்தி உள்ளன.

விறுவிறுப்பாக செயல்பட்டால் தான், சாதிக்க முடியும் என்று முடிவு செய்த ஸ்டாலின், உளவுத்துறையை முழு வீச்சில் முடுக்கிவிட்டு உள்ளார். களத்தில் இருந்து வரும் அனைத்து தகவல்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். பிரசார சுற்றுப்பயணத்தில் இருக்கும் உதயநிதி, போகும் இடங்களில், கேள்விப்படும் விபரங்களையும் கேட்டுக்கொள்கிறார்.

கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும், வரும் ஒவ்வொரு புகாரையும் விசாரிக்கிறார். ஒரு மா.செ.,வைப் பற்றியோ, அமைச்சர் பற்றியோ செய்தி வந்தால், அது குறித்து அவர்களிடம் பேசுவதற்கு முன், எதிர் தரப்பினர் கருத்துக்களை தெரிந்து கொள்கிறார். இப்படி, முதல்வர் தன் முழு நேரத்தையும் இதில் செலவிட நேரிடுவது பற்றி கட்சியினர் ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், கட்சி கட்டமைப்பு பலவீனமாக இருப்பதால் தான் முதல்வருக்கு இவ்வளவு பணிச்சுமை என நொந்து கொள்கின்றனர்.

செல்வாக்கு இல்லை



இது பற்றி அவர்கள் சொல்வது:

தி.மு.க.,வில் தலைவருக்கு அடுத்து பொதுச்செயலர். அது துரைமுருகன். அவருக்கு மூப்பு காரணமாக முன்பு போல் செயல்பட முடியவில்லை. கட்சி மீது கட்டுப்பாடும் இல்லை. இந்த தேர்தலில் வேலுார் தொகுதியோடு ஒடுங்கிவிட்டார். அதற்கு அடுத்து பொருளாளர் டி.ஆர்.பாலு. தேர்தலில் போட்டியிடுவேன் என்று அடம் பிடித்து, தன் ஸ்ரீபெரும்புதுார் தொகுதியோடு ஒடுங்கிவிட்டார். அவருக்கு அடுத்த நிலையில் ஐந்து துணை பொதுச்செயலர்கள் - கனிமொழி, ஆ.ராசா, ஐ.பெரியசாமி, பொன்முடி, அந்தியூர் செல்வராஜ். இவர்களில் இரண்டு பேர் வேட்பாளர்கள்.

ஐ.பெரியசாமிக்கு மதுரை- -திண்டுக்கல் பொறுப்பும், பொன்முடிக்கு விழுப்புரம்- - கள்ளக்குறிச்சி பொறுப்பும் கொடுத்து ஒதுக்கிவிட்டனர்.

அந்தியூர் செல்வராஜ் பெயரளவுக்கு மட்டும் தான் பதவி வகிக்கிறார். அவர்களை அடுத்து அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி. நன்றாக பேசுவார் ஆனால், கட்சியினரை கட்டுப்படுத்தும் அளவுக்கு செல்வாக்கு இல்லை.

ஜெயலலிதா இருந்த போது இந்த மாதிரியான பிரச்னைகளை சமாளிக்க தான், பழனிசாமி, பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் அடங்கிய 'நால்வர் அணி'யை வைத்திருந்தார்.

தலைவருக்கு அடுத்த நிலையில் நல்ல நிர்வாக அமைப்பு இருந்தால் தலைவர் இவ்வளவு சிரமப்படமாட்டார்.

இவ்வாறு தி.மு.க.,வினர் சொல்கின்றனர்.

எனினும் இன்றைய நிலையில், ஸ்டாலினிடம் இருந்து எப்போது அழைப்பு வருமோ என்ற திகிலில் தி.மு.க., நிர்வாகிகள் அனைவரும் பம்பரமாக சுற்றுவதாக கட்சியினர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். 'இப்படியே தொடர்ந்தால் 40ம் நமதே' என்று நம்பிக்கையாக இருக்கின்றனர்.


karupanasamy - chennai, இந்தியா
01-ஏப்-2024 14:26 Report Abuse
karupanasamy கடேசில இந்த எதுக்கும் லாயக்கற்ற உதவாக்கரையை தூக்கிடப் போறாங்க.
Parameswar Bommisetty - NEYVELI, இந்தியா
01-ஏப்-2024 11:47 Report Abuse
Parameswar Bommisetty இப்படியும் நடக்குமா? கூட்டணி மரபுகள் என்ன ஆயிற்று?
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS, யூ.எஸ்.ஏ
01-ஏப்-2024 11:06 Report Abuse
RAMAKRISHNAN NATESAN இந்த புள்ளி கூட்டணிக்கு வாக்களித்தால் அந்த கூட்டணியைப் போலவே நாடு சிதறுண்டு போகும் .... அதாவது நாடே துண்டு துண்டாக ஆகும் .... அதைத்தான் மூர்க்கர்கள் விரும்புகிறார்கள் ..... பாகிஸ்தானிடமே கையேந்தும் நிலைக்கு ஒவ்வொரு துண்டும் தள்ளப்படும் ....
sankaranarayanan - Chennai-Tamilnadu, இந்தியா
01-ஏப்-2024 08:11 Report Abuse
sankaranarayanan நாலு வந்தாலே பெரிசு நாற்பதுக்காக நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு இருக்கக்கூடாது
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்