ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பணிகள் குறித்து நுண் பார்வையாளருக்குப் பயிற்சி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர்அலுவலகம் கூட்ட அரங்கில் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை பணியை கண்காணிப்பது குறித்து நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்து கூறியதாவது:
ஜூன் 4ல் ஓட்டுஎண்ணிக்கை பணியை கண்காணிக்க 105 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 6 தொகுதிகளிலும் தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு ஓட்டு எண்ணப்படும். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் மேற்பார்வையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், இவர்களுடன் ஒரு நுண் பார்வையாளர் பணி மேற்கொள்வார்.
காலை 8:00 மணிக்கு முதலில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி நடக்கிறது. அதன் பின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள்எண்ணப்படும். நுண் பார்வையாளர்களும் முழுமையாக கண்காணித்து ஓட்டு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு சுற்றுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, அறந்தாங்கி உதவி தேர்தல்நடத்தும் அலுவலர் அப்தாப் ரசூல், பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், உதவி கலெக்டர் (பயிற்சி) மொகத் இர்பான், முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) இளங்கோவன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து