காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாட்டை திவாலாக்கும்: மோடி
"பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு எனது உத்தரவாதங்களை தெரிவித்துள்ளேன். ஆனால், எதிர்க்கட்சி கூட்டணியில் எத்தனை கட்சிகள் உள்ளனவோ, அவ்வளவு தேர்தல் அறிக்கைகள் உள்ளன" என, பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ஹோசங்காபாத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:
அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்தால் தான் இன்று பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கிறார். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அம்பேத்கரை அவமரியாதை செய்து வந்துள்ளன. அவரது எண்ணங்களுக்கு நாங்கள் புதிய அடையாளத்தைக் கொடுத்துள்ளோம்.
நீங்கள் செல்போன் வழியாக செலுத்தும் பணம் 'பீம் யுபிஐ' என அவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பல ஆண்டுகளாக நேரடியாகவோ மறைமுகமாகவோ ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஒரு குடும்பம் தான் ஆட்சி செய்தது.
மோடி மீண்டும் பிரதமர் ஆனால் அரசியல் அமைப்புச் சட்டமும் ஜனநாயகமும் ஆபத்தில் சிக்கிவிடும் என காங்கிரஸ் வதந்திகளைப் பரப்புகிறது. தற்போது, 'மோடி பிரதமர் ஆனால் நாடு அழிந்துவிடும்' என காங்கிரஸ் கூறுகிறது.
2014, 2019 லோக்சபா தேர்தலின் போதும் இதையே கூறினார்கள். அப்படி எதாவது நடந்ததா. பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு எனது உத்தரவாதங்களை தெரிவித்துள்ளேன். ஆனால், எதிர்க்கட்சி கூட்டணியில் எத்தனை கட்சிகள் உள்ளனவோ, அவ்வளவு தேர்தல் அறிக்கைகள் உள்ளன.
இதுபோன்ற ஒரு விஷயத்தில் கூட உடன்பட முடியவில்லை என்றால் அவர்களால் அரசை எப்படி நடத்த முடியும். காங்கிரசிடம் பொறாமை இருக்கிறது. பிரிவினை மற்றும் அச்சுறுத்தல் அரசியலில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை வைத்துள்ளது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளை அதிகமாக கலைத்தது காங்கிரஸ் தான். வரலாற்று உண்மைகளை திரித்ததும் அக்கட்சி தான். நாட்டில் வறுமையை ஒழிப்பதாக காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இது தேசத்தில் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இவர்கள் இத்தனை ஆண்டுகளாக எங்கே ஒளிந்திருந்தார்கள் என நாடு ஆச்சர்யப்படுகிறது. இதே வாக்குறுதியை 50 ஆண்டுகளுக்கு முன்பு அவரின் பாட்டி தெரிவித்தார். தேர்தல் அறிக்கைகளால் இண்டியா கூட்டணி குழம்பிப் போயுள்ளது. காங்கிரசின் தேர்தல் அறிக்கை நாட்டை திவாலாக்கிவிடும்.
எனக்கு தனிப்பட்ட கனவுகள் என்று எதுவும் இல்லை. உங்கள் கனவு தான் என்னுடைய உத்தரவாதம். அடுத்து என்ன நடக்குமோ என உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன.
அத்தகைய உலகத்துக்கு வலிமையான இந்தியா தேவைப்படுகிறது. இந்தியாவை நிலைநிறுத்த வலிமையான அரசு தேவைப்படுகிறது. நீங்கள் செலுத்தக் கூடிய ஒட்டு தான் வலிமையான இந்தியாவை கட்டமைக்கும்.
இவ்வாறு மோடி பேசினார்.
வாசகர் கருத்து