தனி அடையாளம் பதிக்கும் பெண்கள்
முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை திட்டுவார், அ.தி.மு.க.,பொதுச்செயலர் பழனிசாமியை திட்டுவார். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தி.மு.க., தலைவர் ஸ்டாலினை திட்டுவார், பா.ஜ., தலைவர் அண்ணாமலையை திட்டுவார், தற்போது மத்திய அரசையும் திட்டத் துவங்கி உள்ளார். பா.ஜ., தலைவர் அண்ணாமலை தி.மு.க.,வை திட்டுவார், தற்போது அ.தி.மு.க.,வையும் திட்டத் துவங்கிவிட்டார்.
இப்படி, அனைத்து பெரிய கட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் திட்டுவதையே, தங்கள் பிரசாரத்தின் மையப்புள்ளியாக வைத்திருப்பதால், கடந்த இரண்டு வாரங்களாக அவற்றை கேட்டு வருவோருக்கு, பிரசார பேச்சு ஓரளவிற்கு புளித்துவிட்டது. இவர்களது கூட்டணி கட்சி தலைவர்களின் பேச்சுகளிலும் பெரிய வேறுபாடு இல்லை.
இப்படி புளித்துப்போன களத்தில், நாம் தமிழர் கட்சி பிரசாரம் மட்டும் புத்துணர்ச்சியோடு இருக்கிறது. காரணம், அந்த கட்சி களமிறக்கி இருக்கும் 20 பெண் வேட்பாளர்கள். அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நன்றாக பேசி இளைஞர்களை கவரக்கூடியவர். அவர் பாணியிலேயே, இந்த 20 பெண் வேட்பாளர்களும், தங்கள் பேச்சால் நடுநிலை வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.
இவர்களில், மருத்துவர், பொறியாளர், பேராசிரியர், முதுகலை ஆராய்ச்சியாளர், கல்வியாளர்கள் என, படித்தவர்களே அதிகளவில் உள்ளனர். ஒவ்வொருவரும் மேடை பேச்சில், புள்ளி விபரங்களை அடுக்கி அசத்துகின்றனர். தேசிய, தமிழக அரசியல் மற்றும் உள்ளூர் பிரச்னைகளை நன்கு தெரிந்து வைத்துள்ள இவர்கள், அவற்றை தெளிவாக பேசுகின்றனர். 'என்னப்பா...இந்த சின்னப் பொண்ணு, இப்படி பொளந்து கட்டுது' என, வாக்காளர்கள் வாய் பிளப்பதை நாம் தமிழர் பிரசார கூட்டங்களில் பார்க்க முடிகிறது.
“மாற்றம்... இந்த ஒரே ஒரு விஷயத்தை நம்பி தான் தேர்தலில் களமிறங்கி உள்ளோம். சிறந்த கல்வியாளர்களை தேர்ந்தெடுத்து, வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளார் சீமான். நான், நான்காவது முறையாக தேர்தலில் நிற்கிறேன். தேசிய, தமிழக அரசியலை எங்கள் பெண் வேட்பாளர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்,'' என்கிறார், முதுகலை தமிழ் மற்றும் 'இயற்கை விவசாயம்' குறித்த ஆராய்ச்சியில் எம்.பில்., பட்டம் பெற்றுள்ள திருப்பூர் தொகுதி வேட்பாளர் சீதாலட்சுமி.
ஒவ்வொரு வேட்பாளரும், மக்களிடம் ஓட்டு கேட்கும் 'வீடியோ' தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் வேட்பாளர்கள் எழுச்சியுற பேசுவதை பதிவு செய்து, சமூக ஊடகங்களில் வைரலாக்கி வருகிறார், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இந்த வேட்பாளர்கள் பற்றி கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், 1.1 சதவீத வாக்குகளை பெற்றோம். 2019 லோக்சபா தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு, 3.9 சதவீத ஓட்டுகள் பெற்றோம்.
2021 சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி, 7 சதவீத ஓட்டு பெற்றது. இது, அதற்கு முன் நடந்த சட்டசபை தேர்தலை விட, ஆறரை மடங்கு அதிகம். லோக்சபா தேர்தலில் பெற்றதை விட, இரண்டு மடங்கு அதிகம்.
தனித்து போட்டி என்ற நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் இருப்பது, எவ்வளவு நல்லது என்பதை கடந்த தேர்தல் வாயிலாக உணர்ந்துள்ளோம்; வரும் தேர்தலில் இது இன்னும் அதிகமாகும். இதனால், 'சீமானே கொள்கை பிடிப்போடு இருக்கிறார்' என்ற தோற்றம் உருவாகிவிட்டது. இது இளைஞர்களுக்கு பிடித்து இருக்கிறது. இம்முறை தேர்தலில், இரட்டை இலக்கத்தில் ஓட்டு சதவீதத்தை உயர்த்திக் காட்டுவதே எங்கள் இலக்கு.
அதேபோல, பெண்ணுரிமை பற்றி பேசும் எந்த பெரிய கட்சியும் செய்யாததை சீமான், தேர்தல் களத்தில் தொடர்ந்து செய்து வருகிறார். தேர்தலுக்காக முன் கூட்டியே அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியது மட்டுமல்ல, இம்முறை, 50 சதவீதம் என்ற கணக்கில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில், 20 தொகுதிகளுக்கு பெண்களை வேட்பாளராக்கி இருக்கிறார்.
அதுவும் ஏப்பை சாப்பை நபர்கள் எந்த தொகுதியிலும் நிறுத்தப்படவில்லை. படித்தவர்கள், மேடையில் ஏறி சகஜமாக நாட்டு நடப்பு குறித்து பேசும் தைரியமான பெண்கள் தான் வேட்பாளர்கள் ஆக்கப்பட்டு உள்ளனர்.
கொள்கை பிடிப்போடு நாம் தமிழரில் இணைந்து இருக்கும் இந்த பெண்களில் ஒரு சிலராவது வெற்றி பெற வேண்டும். அப்போது தான், லோக்சபாவில் ஜனநாயகம் எந்த அளவுக்கு உள்ளது; அங்கே பெண்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை, அவர்கள் நாட்டுக்கே காட்டுவர்.
உதட்டளவில் மட்டும் பெண்களுக்கு 33 சதவீதம் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கும் பிரதான கட்சிகள் மத்தியில் உண்மையான சமூக நீதியை நிலை நாட்டும் கட்சியாக நாம் தமிழர் இருக்கிறது என்பதற்கு, பெண் வேட்பாளர்களுக்கு சரி சமமான வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதே சாட்சி.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இந்த பேச்சை கேட்டு ஈர்க்கப்படு வோரில் எவ்வளவு பேர் நாம் தமிழர்
வாக்காளர்களாக மாறுவார்கள் என்று கணிக்க முடியாவிட்டாலும்; வெறுமே கைகூப்பிய பொம்மை போல் பிரசார வாகனங்கில் செல்லும் வேட்பாளர்கள் மத்தியில் இந்த வேட்பாளர்களுக்கு தனி அடையாளம் கிடைத்துள்ளது என்பதில் ஐயம் இல்லை.
மேடை பேச்சுக்கு பயிற்சி இல்லை
தென்சென்னை வேட்பாளர் தமிழ் செல்வி:
சென்னை ராணி மேரி கல்லுாரியில் தமிழ்துறை தலைவராக இருந்து ஓய்வுப்பெற்றுள்ளேன். உலக தமிழ் ஆராய்ச்சி நிலையத்தில், முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். சிறு வயது முதலே நாளிதழ்கள், தொலைக்காட்சி செய்திகள் வாயிலாக, அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்வேன். நண்பர்களுடன் விவாதங்களில் அரசியல் பேசுவேன். அதில் கிடைக்கும் தகவல்களை வைத்து பிரசாரத்தில் பேசுவதற்கு என்னை தயார்படுத்தி கொள்கிறேன். தலைவர் சீமான் பேச்சு பிடிக்கும். அதே பாணியில் மேடையில் பேசுவது புது அனுபவம். மற்றபடி, மேடை பேச்சுக்கு சிறப்பு பயிற்சிகள் எடுக்கவில்லை.
நாகப்பட்டினம் வேட்பாளர் கார்த்திகா:
கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக, மக்கள் பிரச்னைகளுக்காக போராடி வருகிறேன். போராட்ட களம்தான் எனது பயிற்சி களம். மக்களுடன் கலந்து இருப்பதால், அவர்கள் கூறும் தகவல்களை மனதில் ஏற்றிவிடுவேன். அதைவைத்து பேசுகிறேன். உண்மையை பேசுவதால், அது பலராலும் கவரப்படுகிறது; பாராட்டப்படுகிறது.
அரசியல் அறிவு பெறுவதற்கு அதிகம் படிக்க வேண்டும் என்று, சீமான் அறிவுரை வழங்கி உள்ளார். அதன்படி, நாளிதழ்கள் மட்டுமின்றி, ஒரு பிரச்னை குறித்த தகவல்களை, அடி ஆழம் வரை தெரிந்து கொள்வதற்கு வரலாற்று புத்தகங்களையும் படிக்கிறேன். தொகுதியில் காவிரி, கச்சத்தீவு பிரச்னை குறித்து பல தகவல்களை திரட்டி பேசி வருகிறேன். பலரிடம் இருந்தும் பாராட்டு கிடைக்கிறது.
மயிலாடுதுறை வேட்பாளர் காளியம்மாள்:
எப்போதும் மக்களுடன் தான் இருக்கிறேன். எனவே, மக்கள் பிரச்னைகள் அனைத்தும் அத்துபடி. பொதுவான செய்திகளை நாளிதழ்கள், வலைதளங்கள் வாயிலாக தெரிந்து கொள்கிறேன். இதுமட்டுமின்றி அரசியல் தொடர்பான தகவல்களை நண்பர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனுப்பி வைப்பர். மொபைல்போன் வாயிலாகவும் பல தகவல்களை சொல்வார்கள். இதில் கிடைக்கும் தகவல்களை மனதில் ஏற்றி, அதை பிரசாரமாக்குகிறேன். கட்சியில் என்னைவிடவும் வீரியமாக பேசும் பெண்கள் நிறைய பேர் உள்ளனர்.
வாசகர் கருத்து