அ.தி.மு.க.,வினருக்கு சாபம் விட்ட பெண்கள்
தர்மபுரி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் அசோகனை ஆதரித்து, நேற்று முன்தினம் இரவு, தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., ஓட்டு சேகரித்து பேசினார். அதற்காக மாவட்டம் முழுதும் நுாற்றுக்கணக்கான வாகனங்களில் ஆயிரக்கணக்கானோரை பணம், சாப்பாடு வழங்குவதாக கூறி, அ.தி.மு.க.,வினர் அழைத்து வந்திருந்தனர்.
இதில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கடத்துார் ஒன்றியத்தில், கடத்துார் பேரூராட்சி உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அழைத்து வரப்பட்டனர். இரவு, 9:00 -மணிக்கு பொதுக்கூட்டம் முடிந்தவுடன், அவர்களை வாகனங்களில் ஏற்றி வந்து, கடத்துார் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்ட பின், அ.தி.மு.க.,வினர், 'எஸ்கேப்' ஆகினர்.
பசியும், பட்டினியுமாக நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இரவு, 11:00 மணி வரை பணம், சாப்பாடு கொடுப்பர் என காத்திருந்து காத்திருந்து, கலங்கினர். ஒரு கட்டத்தில் சாபம் விடத் துவங்கினர்.
பொதுக்கூட்டத்திற்கு சென்ற பெண் ஒருவர் கூறுகையில், 'கூலி வேலைக்கு சென்று விட்டு, வீட்டில் இருந்தோரை, 200 ரூபாய் கொடுத்து, சாப்பாடு, தண்ணீர் பாட்டில் கொடுப்பதாக கூறி அழைத்து வந்தனர். ஆனால் எதுவும் தராமல், இரவு- நேரத்தில், நடு வீதியில் விட்டு விட்டு ஓடி விட்டனர்.
எங்கள் வயிற்றெரிச்சல் அவர்களை சும்மா விடாது. சாப்பாடு கூட போட வக்கில்லாதவங்க, எதுக்கு தேர்தல்ல நிக்கணும்' என்றனர்.
இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டோருக்கு, சாப்பாடு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்காததால் ஏமாற்றமடைந்த அவர்கள், தங்களை அழைத்துச் சென்ற, அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து