பினாமிகளாகும் சுயேச்சைகள்
இந்த தேர்தலில், ஒவ்வொரு வேட்பாளரும் அதிகபட்சம் 95 லட்சம் ரூபாய் வரை செலவிடலாம். பிரசார பொதுக்கூட்டம், பேரணி, விளம்பரம், போஸ்டர், வாகனங்கள், சாப்பாடு என, அனைத்தும் இந்த தொகைக்குள் அடங்க வேண்டும். தமிழக வேட்பாளர்களுக்கு வேட்பு மனு ஏற்பு முதல் பிரசாத்தின் கடைசி நாள் வரை, 21 நாட்கள் தான் பிரசாரத்திற்கு கிடைக்கின்றன. அதன்படி, அவர்கள் நாளொன்றுக்கு, 4.50 லட்சம் ரூபாய் தான் செலவிட முடியும்.
இன்றைய விலைவாசியில், இந்த தொகை நிச்சயம் போதாது என்பது அனேக வேட்பாளர்களின் கருத்து. குறிப்பாக பெரிய கட்சி வேட்பாளர்களுக்கு செலவு அதிகம்.
தேர்தல் கமிஷனின் இந்த செலவு உச்சவரம்பை முறியடிக்க, பெரிய கட்சிகள் சுயேச்சை வேட்பாளர்களை ஏற்கனவே களமிறக்கி விட்டனர். இருப்பினும், செலவு மிகுதியாகி வருவதால், இப்போது மற்ற சுயேச்சை வேட்பாளர்களிடம் பேரம் பேசி வருகின்றனர். இதன் காரணமாகவே, சுயேச்சை வேட்பாளர்களை தேர்தல் பிரசாரத்தில் பார்க்க முடியவில்லை.
சுயேச்சை வேட்பாளர்களின் வாகன, செலவு கணக்கில், தாங்கள் செலவு செய்யும் 'பில்'களை சேர்த்து, சமாளிக்கும் வகையில், சுயேச்சைகளுக்கு ஒரு கணிசமான தொகையை கொடுத்து, அவர்களை கையகப்படுத்தும் பணியை தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் செய்து முடித்துள்ளனர்.
இதுகுறித்து அரசியல் கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
சுயேச்சைகள் போட்டியிடுவதே முக்கியமான வேட்பாளரின் அதிகப்படியான செலவுகளை, தங்கள் கணக்கில் சேர்த்து, தேர்தல் கமிஷனுக்கு பதிவு செய்யத் தான். ஒவ்வொரு பிரதான கட்சியும், தங்களுக்குள்ளேயே சுயேச்சைகளை களம் இறக்கியுள்ளன. அதன் வாயிலாக அவர்களுக்கு நிறைய பலன். உதாரணமாக, வாக்காளர் பட்டியல், வாகன பாஸ், ஓட்டுச்சாவடி மையத்துக்கு 'பூத்' ஏஜன்டுகள், ஓட்டு எண்ணும் மையத்துக்கு கூடுதலாக நபர்கள் ஆகியவை முக்கியமானவை.
முழு சம்மதம்
அதனால், 'இவர் சுயேச்சை தானே' என யாரும் அவரை துச்சமாக எந்த இடத்திலும் அலட்சியப்படுத்தி விட முடியாது. பெரிய கட்சி வேட்பாளர்களுக்கு என்ன மரியாதையும் முக்கியத்துவமும் கொடுக்க வேண்டுமோ, அதே முக்கியத்துவத்தை அதிகாரிகள் சுயேச்சைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேச்சைகள் டிபாசிட்டாக, 25,000 ரூபாய் மட்டுமே கட்டுவர். இதர செலவுகள் உட்பட அவர்களது தேர்தல் செலவே, அதிகபட்சம், 50,000 ரூபாய்க்குள் முடிந்து விடும். ஆனால், செலவு செய்யும் 50,000 ரூபாய்க்கு பதிலாக அவர்களுக்கு, 10 லட்சமோ, 20 லட்சமோ கொடுக்கப்படும். அவர்கள், பெரிய கட்சி வேட்பாளர்களுக்காக, தங்கள் பெயரில் என்னவெல்லாம் செய்து தர முடியுமோ, அவற்றை செய்து கொடுப்பதற்கு, முழு சம்மதம் தெரிவிப்பர்.
கூடவே, சுயேச்சையாக போட்டியிடுவோர், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், தன்னை கவனிக்கும் அரசியல் கட்சி வேட்பாளருக்கு, மறைமுகமாக பணியாற்றுவதையும் ஒரு சேவையாக கருதுகின்றனர். இந்த திட்டத்தின் படி, பெரிய கட்சி வேட்பாளர்களின் செலவுத் தொகை, சுயேச்சைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டு கணக்கு தாக்கல் செய்யப்படுகிறது.
இது தேர்தல் கமிஷனை ஏமாற்றும் வேலைதானே என்றால், 'ஆமாம்' என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், நிகழ்கால விலைவாசி குறித்தும், தேர்தல் நடைமுறை குறித்தும் ஒத்துவராத விஷயங்களை நிபந்தனைகளாக விதித்து, செலவு கணக்கு தாக்கல் செய்யச் சொல்லும் தேர்தல் கமிஷனை இப்படித்தான் ஏமாற்ற வேண்டி இருக்கிறது.
செலவு தவிர்க்க முடியாததாக இருக்கும்போது, யதார்த்தத்தை உணர்ந்து தேர்தல் கமிஷன் நிபந்தனைகளை தளர்த்தாத வரையில், இப்படிப்பட்ட ஏமாற்று நிகழ்வுகளும் நடந்து கொண்டு தான் இருக்கும்.
நிரூபணம்
தேர்தலில் 50,000 ரூபாய் செலவழிக்க முடியாதவர்கள் கூட அதிக அளவில் சுயேச்சைகளாக போட்டியிடுவதன் பின்னணி இதுதான். ஒருசிலர் இதை ஒரு தேர்தல் நேர தொழிலாகவே மாற்றிவிட்டனர். அரசியல் கட்சியினர் விஞ்ஞான ரீதியில் சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து ஏமாற்றக் கூடியவர்கள் என்பதை, இந்த விஷயத்திலும் நிரூபித்து விட்டனர்.தேர்தல் ஆணையத்துக்கும் இந்த ஏமாற்று வேலை தெரிந்து தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக, தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இதுபோன்ற ஏமாற்று திட்டம் எங்களுக்கும் தெரியும். ஆனால், ஜனநாயகபூர்வமாக சுயேச்சைகள் போட்டியிட அனுமதி உண்டு. அவரும் செலவு கணக்கு காட்டித் தான் ஆக வேண்டும். இதில், ஏதேனும் புகார் இருந்தால், அது தொடர்பாக விசாரித்து, கமிஷன் நடவடிக்கை எடுக்கும். மற்றபடி, தாக்கல் செய்யப்படும் எல்லா கணக்குகளையும் சந்தேகப்பட முடியாது,'' என்றார்.
வாசகர் கருத்து