ஸ்டாலின், அமைச்சர்களின் 'உல்டா' பேச்சுகள்: திரையில் ஒளிபரப்பி பழனிசாமி புது பிரசாரம்
அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, கடந்த காலங்களில் முதல்வர், அமைச்சர்கள் பேசிய பேச்சுக்களை, எல்.இ.டி., திரையில் ஒளிபரப்பு செய்து, அவர்கள் எவ்வாறு மாற்றி மாற்றி பேசுகின்றனர் என்பதை, மக்களிடம் தெளிவாக எடுத்துரைத்து வருகிறார். இதற்கு கட்சியினர் மற்றும் மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
வடசென்னை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மனோவை ஆதரித்து, நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அப்போது, சென்னையில், கடந்த ஆண்டு மழைக்கு முன், மழைநீர் கால்வாய் பணிகள் 98 சதவீதம் முடிந்து விட்டதாக அமைச்சர்கள் பேசியவை, எல்.இ.டி., திரையில் ஒளிபரப்பப்பட்டன.
அவற்றை ஒளிபரப்பிய பின் பழனிசாமி பேசியதாவது:
இவர்களின் பொய்யை நம்பி, மக்கள் எல்லாம் முன்னெச்சரிக்கை இல்லாமல் போய் விட்டனர். இவர்கள் பேச்சை நம்பி எவ்வளவு மழை பெய்தாலும், ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்காது என சென்னை மக்கள் நினைத்தனர். ஆனால், 'மிக்ஜாம்' புயலில் மழை பெய்து, வீட்டிலிருந்த பொருட்கள் நாசமானது தான் மிச்சம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், மழையால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர், 'ஸ்டாலின் தான் வந்தாரு... நீச்சலடிக்க விட்டாரு' எனக் கூறியதை, திரையில் ஒளிபரப்பினர். அதேபோல், ராமநாதபுரத்தில் நேற்று பழனிசாமி பேசினார்.
அப்போது, ஸ்டாலின், தி.மு.க., கூட்டணி சட்டசபையில் பெற்ற இடங்களின் எண்ணிக்கையை 107 என சொன்னது, குடியரசு தினம் ஜனவரி 25, ஜனவரி 15 என மாற்றிச் சொன்னது ஆகியவை, எல்.இ.டி., திரையில் ஒளிபரப்பப்பட்டன.
அவற்றை சுட்டிக்காட்டிய பழனிசாமி, ''ஸ்டாலினை விட நமக்கு அறிவு சற்று அதிகம் என்பதை இதன் மூலம் மக்கள் உணர்வர்,'' என்றார்.
வாசகர் கருத்து