காங்கிரசை தொடர்ந்து இ.கம்யூ., : அதிர்ச்சி கொடுத்த ஐ.டி.,
காங்கிரசை தொடர்ந்து இ.கம்யூ., கட்சிக்கும் 11 கோடி ரூபாய் அபராதத்தை விதித்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள தகவல், எதிர்க்கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணியின் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையில், 'வருமான வரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை' எனக் கூறி கடந்த வாரத்தில் காங்கிரசின் 4 வங்கிக் கணக்குகளை காங்கிரஸ் முடக்கியது. கூடவே, வங்கிக் கணக்குகளில் இருந்து 135 கோடி ரூபாயை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "காங்கிரசின் மீது பிரதமர் மோடியும் அமித் ஷாவும் கிரிமினல் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்ற கருத்தியல் பொய்யாக்கப்பட்டுள்ளது. நாட்டில் 20 சதவீத வாக்குகள் உள்ள எங்களால் 2 ரூபாயைக் கூட எடுக்க முடியாத அளவுக்கு வங்கிக் கணக்கை முடக்கிவிட்டனர்" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், '1,823 கோடி ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும்' என வருமான வரித்துறையில் இருந்து வந்த நோட்டீஸ், காங்கிரஸ் நிர்வாகிகளை அதிரவைத்துள்ளது.
அதில், '2017-2018 நிதியாண்டு முதல் 2020-2021 வரையிலான காலகட்டத்தில் முறையாக வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யாததால், வட்டியுடன் கூடிய அபராதமாக 1,823 கோடி ரூபாயை செலுத்த வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், இ.கம்யூ., கட்சிக்கும் 11 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்துமாறு கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும்போது, பழைய பான் கார்டை பயன்படுத்தியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து தங்களின் வழக்கறிஞர்களுடன் இ.கம்யூ., நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட ஏஜென்சிகளை மத்திய அரசு பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன.
காங்கிரசை தொடர்ந்து இ.கம்யூ., கட்சிக்கும் பணம் செலுத்துமாறு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ், தேர்தல் நேரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
வாசகர் கருத்து