அழைப்பிதழில் கூட பெயர் இல்லை காங்., மேயர் புறக்கணிப்பு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன். ஆட்டோ டிரைவராக இருந்து மேயராக வந்தவர். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல் மேயரும் இவர் தான். மேயராக பொறுப்பேற்ற நாளில் இருந்து தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் இவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
இவருக்கு எதிராக மாநகராட்சி கவுன்சில் கூட்டங்களில் வெளிநடப்பு, உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தியுள்ளனர். தி.மு.க., துணை மேயர் தமிழழகன், மேயர் சரவணனிடம் பலமுறை வாக்குவாதம் செய்துள்ளார்.
இந்நிலையில், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டு, சுதா வேட்பாளராக போட்டியிடுகிறார். மயிலாடுதுறை தொகுதி பொறுப்பாளரான அமைச்சர் மகேஷ், காங்., வேட்பாளர் சுதாவுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல கும்பகோணம் மாநகரில் தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன், துணை மேயர் தமிழழகன் உள்ளிட்டோர் பிரசாரத்தில் உள்ளனர்.
இதற்கிடையே, கும்பகோணம் மாநகரில், அமைச்சர் உதயநிதி கடந்த, 5ம் தேதி பிரசாரம் செய்தார். அப்போது மேயர் சரவணன் பங்கேற்கவில்லை.
அதேபோல், காங்., முன்னாள் மாநில தலைவரும், மயிலாடுதுறை தொகுதி பொறுப்பாளருமான கே.எஸ்.அழகிரி பிரசாரத்தில் ஈடுபட்டார். அதற்கான அழைப்பிதழிலும் மேயர் சரவணன் பெயர் இல்லை.
மேலும், மாநகரில் நடைபெறும் பிரசாரங்களுக்கும் மேயரை தி.மு.க.,வினர் அழைப்பதில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன் தனக்கு தி.மு.க.,வினரால் ஏற்படும் நெருக்கடியை, சொந்த கட்சியினரே கண்டுகொள்வதில்லை என்ற வெறுப்பால், மேயர் சரவணன் பிரசாரத்தை புறக்கணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
வாசகர் கருத்து