நான் கூறியதில் என்ன தவறு: அண்ணாமலை சாடிய செல்லூர் ராஜு
"கச்சத்தீவை மீட்பதற்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எனப் பலர் முயற்சி செய்தனர். கச்சத்தீவு விவகாரத்தில் தேசிய கட்சிகள் தான் தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும்" என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
மதுரையில் நிருபர்களிடம் செல்லுார் ராஜூ கூறியதாவது:
நான் எங்கும் தவறான வார்த்தையை பயன்படுத்தியது கிடையாது, என்னை தெர்மாகோல் என அனைவரும் கிண்டல் செய்தனர். நான் பேசினால் மழை வரும் என சொல்லும் அண்ணாமலைக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டாமா?
ஒருவர் பேசினால் மழை வரும் என்றால் நான் எல்லா இடங்களிலும் பேசிக்கொண்டே இருக்கலாம். ஏதோ பேச வேண்டும் என்பதற்காக அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் ஏன் கச்சத்தீவை மீட்கவில்லை?
தேர்தல் நேரத்தில் பேசுவதற்கு என்ன காரணம். கச்சத்தீவை மீட்பதற்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எனப் பலர் முயற்சி செய்தனர். கச்சத்தீவு விவகாரத்தில் தேசிய கட்சிகள் தான் தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும். அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதாவும் வழக்கு தொடர்ந்தார். அதை தொடர்ந்து நடத்துவதற்கு தி.மு.க., மறுத்துவிட்டது.
'மீனவர்கள் வாக்கு அதிகமாக இருப்பதால் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ., கையில் எடுத்துள்ளது' என நான் கூறியதில் என்ன தவறு. அண்ணா, ஜெயலலிதா, ஈ.வெ.ரா., போன்றவர்களை அண்ணாமலை இழிவாக பேசினார். இதுபோல ஒரு கட்சியின் மாநில தலைவர் பேசலாமா என்று தான் கேட்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து