சத்தியம் செய்தால் கட்சியை கலைத்துவிடுகிறேன்: அண்ணாமலைக்கு சீமான் சவால்
"நாட்டை ஆட்சி செய்யும் பிரதமர், 'தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தான் கச்சத்தீவை பற்றி தெரிந்து கொண்டேன்' என்கிறார். இவர்கள் எந்த அளவுக்கு ஆட்சி செய்து இருக்கிறார்கள் என்பது தெரிகிறது" என. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:
மக்களிடம் எப்போதும் எங்களுக்கு வரவேற்பு இருக்கிறது. தற்போது 3வது இடத்தில் இருக்கும் நான் முதல் இடத்துக்கு வர முயற்சி செய்வேன். தேர்தலில் பா.ஜ., வெல்ல வேண்டும் என்றால் ஓட்டுப் பெட்டியில் குளறுபடி செய்வவதைத் தவிர வேறு வழி கிடையாது.
திரிபுராவில் 2 சதவீத வாக்கு சதவீதத்தில் இருந்தவர்கள், 42 சதவீதத்துக்கு எப்படி சென்றனர். வாக்கு இயந்திரத்தை முடக்காமல் நோட்டாவுக்கு இணையாக கூட இவர்களால் ஓட்டுகளை வாங்க முடியாது.
40 லோக்சபா தொகுதிகளை கொண்ட பிஹாரில் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது, தமிழகத்தில் மட்டும் ஏன் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க வேண்டும்?
தமிழகத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. ஆனால், ஓட்டுகளை எண்ணுவதற்கு 44 நாள்களை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், சமவாய்ப்பை பற்றி பா.ஜ., பேசுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் பயன்பாட்டை பெரும்பாலான நாடுகள் கைவிட்டுவிட்டன.
கச்சத்தீவு விஷயத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் எனப் பயந்து தி.மு.க., சரணடைந்தது. இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது கச்சத்தீவு மீட்க போராடுவோம் எனக் கூறுவதன் மூலம் மக்களை எப்படி நினைக்கிறார்கள் என தெரிகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அண்ணாமலை மட்டும் ஏன் தகவலை எடுத்து தர வேண்டும். தமிழகத்தில் அவரை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பதால் இப்படி செய்கின்றனர்.
நாட்டை ஆட்சி செய்யும் பிரதமர், 'தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தான் கச்சத்தீவை பற்றி தெரிந்து கொண்டேன்' என்கிறார். இவர்கள் எந்த அளவுக்கு ஆட்சி செய்து இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
என் சின்னத்தை பறித்தது பா.ஜ., தான் என ராமர் கோயிலை வைத்து சத்தியம் செய்கிறேன். பா.ஜ.,வுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அண்ணாமலை சத்தியம் செய்தால் என் கட்சியை கலைத்துவிடுகிறேன். 5 வயதில் இருந்து அரசியலில் இருப்பவன் நான்.
மாம்பழம், சைக்கிள் சின்னம் ஆகியவற்றை மட்டும் எப்படி தேர்தல் கமிஷன் ஒதுக்கியது. தமிழகத்திற்கு மட்டுமாவது கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்குங்கள் எனக் கேட்டேன். இப்போது கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டால் என் ஓட்டுகளை குழப்ப வேண்டும் என்ற எண்ணம் பா.ஜ.,வுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்
வாசகர் கருத்து