வாக்குறுதியை மீறினால் வர மாட்டேன்: கரூரில் உதயநிதி காமெடி
"மோடியிடம் நான் கேள்வி கேட்கிறேன். ஆனால், பழனிசாமிக்கு கோபம் வருகிறது. சசிகலா காலில் விழுந்ததை பெருமையாகவே சொல்கிறார். உலகில் இப்படியொரு மனிதரை பார்க்கவே முடியாது" என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து உதயநிதி பேசியதாவது:
கரூரில் ஜோதிமணி வெற்றி பெற்றால் மாதம் 2 முறை நான் கரூருக்கு வருவேன். உங்கள் பிரச்னைகளை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்ப்பேன். வாக்கு எண்ணிக்கையின் போது 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற வேண்டும்.
அவரை எதிர்த்து எந்தக் கொம்பன் போட்டியிட்டாலும் அவரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். ஒருவேளை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி வெற்றி பெறவில்லை என்றால் நான் கரூருக்கு வர மாட்டேன்.
தேர்தல் நாடகமாக காஸ் சிலிண்டர் விலையில் 100 ரூபாயை குறைத்துள்ளனர். தேர்தல் முடிந்தவுடன் 500 ரூபாயாக மோடி உயர்த்திவிடுவார். யாருடைய காலிலும் விழுந்து ஸ்டாலின் முதல்வராகவில்லை. அவர் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினார்.
மகளிர் உரிமைத் தொகை 1.16 கோடி மகளிருக்கு கிடைத்து வருகிறது. ஆறு மாதங்களில் விண்ணப்பித்த தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படும். எங்கள் ஆட்சியின் சாதனைகளை சொல்கிறோம்.
பிரதமர் மோடி நன்றாக வடை சுடுவார். அந்த வடையைக் கூட அவரே சாப்பிட்டுவிடுவார். பீகார் மாநிலம் ஒரு ரூபாய் கொடுத்தால், அவர்களுக்கு மோடி அரசு 7 ரூபாயை கொடுக்கிறது. உ.பி.யில் ஒரு சாமியார் முதல்வராக இருக்கிறார். அந்த மாநிலம் 1 ரூபாயை கொடுத்தால் 3 ரூபாய் தருகிறார்.
ஆனால், நமக்கு 29 பைசா தான். அதனால் தான் அவரை 29 பைசா எனக் கூறுகிறோம். கடந்த 10 வருடமாக ஆட்சியில் இருந்தாலும் தேர்தல் வரும் போது தான் மோடி தமிழகத்துக்கு வருவார்.
பா.ஜ., ஆளும் மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. கிண்டியில் 10 மாதத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை ஸ்டாலின் கட்டினார். இவர்களால் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வர முடியவில்லை.
மோடியின் குடும்பம் என்பது ஈ.டி, ஐ.டி, சி.பி.ஐ தான். மோடி குடும்பத்தின் நண்பராக அதானி இருக்கிறார். அவர் உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அதானி விமான நிலையம், அதானி துறைமுகம், அதானி மின்சாரம் என அனைத்தையும் அவருக்கு கொடுத்துவிட்டனர்.
மோடியிடம் நான் கேள்வி கேட்கிறேன். ஆனால், பழனிசாமிக்கு கோபம் வருகிறது. சசிகலா காலில் விழுந்ததை பெருமையாகவே சொல்கிறார். உலகில் இப்படியொரு மனிதரை பார்க்கவே முடியாது. அ.தி.மு.க.,வினரை பா.ஜ., மிரட்டி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.
செந்தில் பாலாஜியையும் மிரட்டி உள்ளே வைத்துள்ளனர். தேர்தல் வெற்றி விழாவில் செந்தில் பாலாஜி உங்களை சந்திப்பார். அதற்கான சட்டப் போராட்டம் நடந்து வருகிறது.
இவ்வாறு உதயநிதி பேசினார்.
வாசகர் கருத்து