போரில் வெற்றி பெறும் வரை ஓயப்போவதில்லை: ராகுல் சபதம்
"பாரத மாதாவின் குரலை நசுக்க முயலும் வெறுப்பு, ஊழல், அநீதி போன்ற சக்திகளிடம் இருந்து நமது ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டம் தான் இந்த தேர்தல்" என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் 2019 தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்தமுறையும் வயநாடு தொகுதியில் அவர் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணியில் உள்ள இ.கம்யூ., சார்பில் ஆனி ராஜா போட்டியிட உள்ளார்.
இந்நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பேரணியாக ராகுல்காந்தி சென்றார். அவருடன் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் உடன் சென்றனர். முடிவில் தேர்தல் அதிகாரியிடம் ராகுல் காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பின், ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
வயநாடு எனது வீடு, வயநாட்டு மக்கள் எனது குடும்பம். கடந்த ஐந்து ஆண்டுகளாக இம்மக்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவர்களிடம் இருந்து அளவுகடந்த அன்பையும் பாசத்தையும் பெற்றேன்.
2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக மீண்டும் இந்த அழகிய மண்ணில் இருந்து வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக மிகுந்த பெருமைப்படுகிறேன்.
இந்தத் தேர்தல் என்பது இந்தியாவின் ஆன்மாவை காப்பதற்கான போராட்டம். பாரத மாதாவின் குரல்வளையை நசுக்க முயலும் வெறுப்பு, ஊழல், அநீதி போன்ற சக்திகளிடம் இருந்து நமது ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டம்.
இண்டியா கூட்டணியில் உள்ள ஒவ்வொருவருடனும் இணைந்து இந்தப் போரில் வெற்றி பெறும் வரை நான் ஓயப்போவதில்லை. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும் மணிப்பூர் முதல் மும்பை வரையிலும் மத்திய ஆட்சியை வலுப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து