காலம் கடந்தே விஜயகாந்துக்கு பத்மபூஷன்: பிரேமலதா பேச்சு
"கருணாநிதியும் இந்திரா காந்தியும் 1974ல் நமக்கு உரிமையாக இருந்த கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துவிட்டனர். 10 ஆண்டுகாலம் பேசாத பிரதமர் மோடி இப்போது தான் கச்சத்தீவு குறித்துப் பேசுகிறார்" என, தே.மு.தி.க.,பொதுச்செயலர் பிரேமலதா பேசினார்.
காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து பிரேமலதா பேசியதாவது:
உலகம் முழுவதும் காஞ்சி பட்டு ரொம்பவே பிரபலம். அனைத்து தரப்பு மக்களும் போற்றக் கூடிய ஒன்றாக காஞ்சி பட்டு இருக்கிறது. விவசாயமும் நெசவும் மனிதனின் இரண்டு கண்கள். ஆனால், வறுமைக்கோட்டுக்குக் கீழ் நெசவாளர்கள் உள்ளனர். அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது.
தி.மு.க.,வும் பா.ஜ.,வும் எவ்வளவு வாக்குறுதிகளை கொடுத்தாலும் நெசவாளர்களின் வாழ்க்கையை சீர்செய்வதற்கு அவர்கள் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. நூல் விலை கடுமையாக உயர்ந்துவிட்டதால் அவர்களின் வாழ்வாதாரம் அழிந்துவிட்டது.
கைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் துணிகளுக்கு மத்திய அரசிடம் பேசி ஜி.எஸ்.டி விலக்கை பெற்றுத் தருவோம். ஜரிகை விலை உயர்வை கட்டுப்படுத்துவோம். ஜி.எஸ்.டி விலக்கு கிடைக்கும் போது நெசவாளர்களின் வாழ்க்கை தரம் உயரும். அதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம்.
இன்றைக்கு கச்சத்தீவு விவகாரம் பெரிதாக பேசப்படுகிறது. 1974ல் கருணாநிதியும் இந்திரா காந்தியும் நமது உரிமைகளை இலங்கைக்கு தாரைவார்த்துவிட்டனர். 10 ஆண்டுகாலம் பேசாத பிரதமர் மோடி இப்போது தான் கச்சத்தீவு குறித்துப் பேசுகிறார்.
அவர், கேப்டனுக்கும் காலம் கடந்து தான் பத்மபூஷன் விருதைக் கொடுத்தார். கச்சத்தீவை மட்டுமல்ல காவிரி நீரின் மீதான உரிமையையும் காங்கிரசுடன் சேர்ந்து தி.மு.க., விட்டுக் கொடுத்துவிட்டது. இலங்கைவாழ் தமிழ் மக்களின் படுகொலைக்கு தி.மு.க.,வும் காங்கிரசும் காரணம் என்பதை மக்கள் மறக்கவில்லை.
ஏப்ரல் 19ம் தேதி காலையிலேயே ஓட்டு சாவடிக்கு சென்றுவிடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் ஓட்டை கள்ள ஓட்டாக மாற்றிப் போட்டுவிடுவார்கள். தி.மு.க., தன்னிடம் உள்ள ஆட்சி அதிகாரத்தை வைத்து சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை அரங்கேற்றி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து