'100 நாட்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அமைக்கப்படும்': கஞ்சா விற்பனையைத் தடுக்க அண்ணாமலை உறுதி
''கஞ்சா விற்பனையைத் தடுக்க மாநில அரசு தவறிவிட்டது. ஓட்டு எண்ணிக்கை முடிந்த 100 நாட்களுக்குள் கோவையில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் அமைக்கப்படும்,'' என பா.ஜ., கோவை லோக்சபா வேட்பாளர் அண்ணாமலை வாக்குறுதி அளித்தார்.
நேற்று கோவையின் பல்வேறு பகுதிகளில், அண்ணாமலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த, 2014ல் பா.ஜ., 283 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையாக வென்றது. 2019ல், 303 எம்.பி.,க்களுடன் ஆட்சி அமைத்தது. தற்போது 400 எம்.பி.,க்களை கேட்கிறார் மோடி.
ராமர் கோவில், 370வது சட்டப்பிரிவு என முக்கிய முடிவுகளை நிறைவேற்றி விட்டோம். அடுத்து, நதி நீர் இணைப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். இதற்காக 400 எம்.பி.,க்கள் பலம் தேவை.
தமிழகத்தில் நதிநீர் மேலாண்மை சரியில்லை. சிறுவாணியில் கேரள அரசு அணை கட்ட முடிவு செய்துள்ளது. தி.மு.க., அரசு வேடிக்கை பார்க்கிறது.
மாணவர்களிடமும் இளைஞர்களிடமும், கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளது. மாநில அரசு இதைக் கட்டுப்படுத்தாது. எனவே, மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகம், ஓட்டு எண்ணிக்கை முடிந்த 100வது நாளில், இங்கு அமைக்கப்படும்.
என்.டி.பி.எஸ்., எனப்படும், போதைப் பொருள் தடுப்புச் சட்டம், 1985ன் கீழ் மரண தண்டனை விதிக்க முடியும். தமிழகத்தில் கஞ்சாவைக் கட்டுப்படுத்த, இதுபோன்ற கடுமையான அமைப்புகள்தான் தேவை.
இவ்வாறு, அண்ணாமலை பேசினார்.
கோவை இடையர்பாளையத்தில், அண்ணாமலையின் வருகைக்காக பா.ஜ.,வினர் காத்திருந்தனர். அப்போது, அ.தி.மு.க., பிரசார வாகனம் அவ்வழியாக வந்தது. அவ்வாகனத்தில் இருந்து பேசியவர், கரூரில் இருந்து இங்கு வந்து அரசியல் செய்வதாக பேசத் துவங்கி, அண்ணாமலையை சற்று தரக்குறைவாக விமர்சனம் செய்ய, பா.ஜ., தொண்டர்கள் ஆவேசம் அடைந்தனர்.அ.தி.மு.க., பிரசார வாகனத்தை முற்றுகையிட்டனர். இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது. அங்கிருந்தோர்சமாதானம் செய்ததால், பிரச்னை தவிர்க்கப்பட்டது.
கோவையில் பா.ஜ., - எம்.பி.,!அண்ணாமலை பேசுகையில், ''கோவை இளைஞர்கள் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு சென்று பணிபுரிகின்றனர். இங்கேயே வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்கள் அமைக்கப்படும். மத்தியில் பா.ஜ., ஆட்சி நடக்கும்போது, இங்கும் பா.ஜ., - எம்.பி., இருந்தால், அரசின் திட்டங்களை கோவையில் உடனுக்குடன் முழுமையாக செயல்படுத்த முடியும்,'' என்றார்.
வாசகர் கருத்து