உதயநிதி பிரசாரத்தால் போக்குவரத்து தடை
வடசென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.,வின் கலாநிதியை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி நேற்று, பெரம்பூரில், மாதவரம் நெடுஞ்சாலையில் பிரசாரம் செய்தார். இதற்காக காலை 7:00 மணி முதலே தி.மு.க., தொண்டர்களை சாலையில் இருபுறமும்குவிந்தனர்.
ஒவ்வொரு வட்ட செயலரும் 300 பேரை அழைத்து வர வேண்டும் என, மேலிடம் கொடுத்த உத்தரவை ஏற்று தி.மு.க,வினர் பலர், வேன்களில் ஆட்களை திரட்டி கொண்டு வந்தனர்.
உதயநிதி பிரசாரத்தால் டான்பாஸ்கோ சந்திப்பு முதல் லட்சுமியம்மன் கோவில் சந்திப்பு வரை உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அவ்வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால், வாகன ஓட்டிகள் 5 கி.மீ., சுற்றி செல்ல வேண்டியிருந்தது.
பிரசாரம் செய்ய வந்த உதயநிதியின் வேன் நிற்கும் இடத்தில் மட்டும் வெயில் பாதிப்பு இல்லாமல் இருக்க, பந்தல் தோரணம் போடப்பட்டிருந்தது. தொண்டர்கள் அனைவரும், வெயிலில் வாடி வதங்கினர்.
பிரசாரத்திற்கு நண்பகல் 12:00 மணிக்கு உதயநிதி வந்ததும், அவருக்கு பின்னால் இருந்த கூட்டம் மெல்ல கலையத் துவங்கியது.
வெயிலின் கடுமை அதிகமாக இருந்ததால், பலர்ஆங்காங்கே மயங்கி விழுந்தனர். இந்த வகையில் ஆறு பேர் மயங்கினர். அங்கிருந்தோர், மயங்கியோருக்கு தண்ணீர் கொடுத்து மயக்கம் தெளிய வைத்தனர்.
உதயநிதி பேச ஆரம்பித்ததுமே, கூட்டத்தில் இருந்த ஒரு பெண்மணி, மகளிர் உரிமைத்தொகை வரவில்லையே என, புகார் தெரிவித்தார். “விரைவில் எல்லாருக்கும் கிடைக்கும் அதற்கு நான் கியாரண்டி,” என, உதயநிதி சொல்லி சமாளித்தார். கடந்த இரண்டு மாதங்களாக ஒவ்வொரு கூட்டத்திலும் பேசும் அதே பேச்சையே நேற்றும் பேசினார்.
வாசகர் கருத்து