'சுப்பராயன் வேண்டாம்' இ.கம்யூ.,வில் கடும் எதிர்ப்பு
திருப்பூர் லோக்சபா தொகுதியில் இந்திய கம்யூ., சார்பில் மீண்டும் களமிறங்கும் முயற்சியில், சிட்டிங் எம்.பி., சுப்பராயன் தீவிரமாக உள்ளார்.
இ.கம்யூ., கட்சியில், மாநில குழு வேட்பாளரை தேர்வு செய்யும் முன்னதாக, திருப்பூர் புறநகர் மற்றும் மாநகர் மாவட்டங்கள், ஈரோடு வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள் என, நான்கு மாவட்ட குழு மூலமாக, தீர்மானம் நிறைவேற்றி, பரிந்துரைக்க வேண்டும்.
இதற்கிடையில், ஈரோடு மாவட்ட நிர்வாகிகளை சிட்டிங் எம்.பி., சுப்பராயன் சந்தித்தபோது, 'இம்முறை தேர்தலில் நிற்க வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டனர். சரியென்று ஒப்புக்கொண்டவர், அடுத்தநாளே, ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட குழுவை கூட்டி, 'நானே தேர்தலில் போட்டியிடுகிறேன். நானே வேட்பாளர்' என்று பேசி, ஆதரவு திரட்டியுள்ளார்.
இ.கம்யூ., கட்சி விதிகளின் படி, இரண்டு முறைக்கு மேல் ஒரு நிர்வாகி தேர்தலில் போட்டியிடக்கூடாது; 70 வயதுக்கு மேற்பட்டவர், மற்றவர்களுக்காக வழிவிட்டு கட்சி பொறுப்பிலும் இருக்கக்கூடாது. ஆனால், இந்த விதிகளை எல்லாம் மீறி சுப்பராயன், வேட்பாளராக நிற்க ஆர்வம் காட்டுவதால், ஈரோடு வடக்கு மாவட்ட குழுக் கூட்டமும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
அதனால், ஈரோடு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பாப்பா மோகன், ஸ்டாலின் குணசேகரன், மாநில துணை செயலர் பெரியசாமி, சிட்டிங் எம்.பி., சுப்பராயன் ஆகியோரை மாவட்ட குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் பரவியுள்ளது.
இ.கம்யூ., கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
கம்யூனிஸ்ட் கட்சி, தன் அடையாளத்தை இழந்து வருகிறது. கட்சிக்கான தார்மீக சாராம்சம், அடிப்படை கோட்பாடுகள் மெல்ல மறைந்து வருகின்றன. சிலர் அடிமைகளாக இருக்கும் வரை, கட்சியில் வளர்ச்சி இருக்காது. திராவிட கட்சிகளை காட்டிலும், கம்யூ., கேவலமாக மாறிவிட்டது.
சுப்பராயன் கூடாது என்றுதான், மற்ற மூன்று பெயர்களை பரிந்துரைத்துள்ளனர். கட்சி தலைமை, கட்சி விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குவதாக இருந்தால், சரியான முடிவை எடுக்கட்டும். ஒருவர் மட்டுமே, 'பெரியண்ணனாக' இருந்து ஆள வேண்டுமா என, கட்சி தோழர்கள் அதிருப்தியுடன் கேள்வி கேட்டுள்ளனர். மாநில குழு நியாயத்தை நிலைநாட்டும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து