பா.ஜ.,வின் துரோகம் தான் பிரசாரம்!
பா.ஜ.,வையும் அ.தி.மு.க.,வையும் தன் டகால்டி வேலைகளால் கிறுகிறுக்க செய்து வந்த பா.ம.க.,வை, ஒரு வழியாக, நேற்று காலை, பிடித்துப் போட்டுள்ளது பா.ஜ., பா.ஜ.,வின் இந்த வெற்றியால், அ.தி.மு.க., பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உச்சபட்ச கடுப்பில் இருக்கிறார். அவர், பா.ஜ., தனக்கு துரோகம் செய்துவிட்டதாக ஒரு முடிவுக்கு வந்து விட்டார். அதனால், இனி தன் பிரசாரம் முழுதும் பா.ஜ.,வின் துரோகத்தை பற்றி தான் இருக்கும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார்.
அ.தி.மு.க., தரப்பில் பா.ம.க.,வுடன் பேச்சு நடத்தியது பழனிசாமிக்கு அணுக்கமான சேலம் புறநகர் மாவட்டச் செயலர் இளங்கோவன். இவரை சந்தித்தபோது, கோபத்தின் உச்சத்தில, பழனிசாமி அவரிடம் கூறியதாக, இளங்கோவனுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்ததாவது:
நாட்டில் எந்த கட்சியையும் கூட்டணியையும் பா.ஜ., விட்டு வைப்பதில்லை. அவற்றை உடைப்பதே பா.ஜ.,வின் பிழைப்பாகிவிட்டது. பா.ம.க, விஷயத்திலும் அதை தான் செய்திருக்கின்றனர்.
நான்கு ஆண்டு காலம், என் தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சிக்கு பா.ஜ., ஆதரவு கொடுத்ததாக சொல்லி வருகின்றனர்.
கேட்ட உதவியை செய்தோம்
ஆனால், சி.ஏ.ஏ., உள்ளிட்ட அனைத்து சட்டங்களுக்கும் ஆதரவு கொடுத்தோம். மக்களை பெரிய அளவில் பாதிக்கக்கூடிய ஒரு சில விஷயங்களை மட்டும்தான் எதிர்த்தோம். காவிரி பிரச்னையில் மட்டும் தான், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் லோக்சபா கூட்டத்தொடரை புறக்கணித்து, பா.ஜ.,வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றபடி எல்லா விஷயங்களிலும் மத்திய அரசுக்கு ஆதரவாக இருந்திருக்கிறோம்.
அது மட்டுமா? உ.பி., கர்நாடகா என பல மாநில தேர்தல்களில் பா.ஜ., நம்மிடம் உதவி கேட்டது. அவர்கள் கேட்ட உதவியெல்லாம் செய்து கொடுத்தோம்.
நம்மிடம் எல்லா பலன்களையும் வாங்கிக் கொண்டு, தேர்தல் நேரத்தில், திட்டமிட்டு நம்மை வெட்டிவிட்டனர்.
அண்ணாமலையை அ.தி.மு.க.,விற்கு எதிராக பேச வைத்தனர் முதலில் இந்த உத்தி நமக்கு தெரியவில்லை. அண்ணாமலையை கட்டுப்படுத்தச் சொல்லி, அமித் ஷாவிடம் முறையிட்டபோது, 'டில்லிக்கு வாருங்கள் பேசி தீர்த்துக் கொள்ளலாம்' என, அழைத்தார். ஆனால், அங்கே அண்ணாமலையையும் வைத்துக் கொண்டே தான் பேசினார். அப்போது தான் சந்தேகம் வந்தது. இருந்தாலும், அந்த சந்திப்புக்கு பின் தீர்வு வரும் என, எதிர்பார்த்தேன்.
மாறாக, அண்ணாமலை, அ.தி.மு.க., வும் ஊழல் கட்சி தான் என, பேசினார். பா.ஜ., மேலிடத்திடம் முறையிட்டோம். அவர்கள் அதை ஏற்கவில்லை. தொடர்ச்சியாக, அ.தி.மு.க.,வின் அடையாளங்களான எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா குறித்து விமர்சித்ததோடு; ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி என்றும் அண்ணாமலை சொன்னார்.
அதன்பின்னும், பா.ஜ.,வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால், நாம் ஏன் அ.தி.மு.க.,வினராக இருக்க வேண்டும்? கோடிக்கணக்கான தொண்டர்களுக்கு என்ன பதில் சொல்வோம்? அதனால் தான், அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என, கெடு வைத்தோம். அதை அவர் கண்டு கொள்ளவே இல்லை. அவரை தலைவர் பதவியில் இருந்து விடுவிக்க பா.ஜ., தலைமைக்கு கெடு விதித்தோம். அதையும் கண்டு கொள்ளவில்லை.
இதனால், தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு தலைமை கழக அலுவலக வாயிலில் கூடினர். அண்ணாமலை மீது தனிப்பட்ட விமர்சனம் வைக்கக் கோரினர். ஆனால், நான் அதை விரும்பவில்லை. ஜெயகுமார் பதில் சொன்னார்.
இதையடுத்து, தொண்டர்கள் கூட்டணியை தொடர வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.
இதனால் தானே கூட்டணியை முறித்துக் கொண்டோம்? அவர்கள் முறித்துக் கொள்ள செய்தனர் என்பது தான் சரி. அப்படி செய்தால் தான் எதிர்காலத்தில், கூட்டணி முறிந்தது நம் தவறு போல சுட்டிக் காண்பிக்க முடியும். என்ன ஒரு நரித்தனமான வேலை பாருங்கள்.
சின்னத்தை முடக்க முயற்சி
இவ்வளவு நடந்தும், நாகரிகம் கருதி, இன்று வரை, பா.ஜ., அரசையோ, பிரதமர் மோடியையோ நான் விமர்சிக்கவில்லை. கட்சியினரையும், விமர்சிக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தேன்.
இருந்தும் பன்னீர்செல்வத்தை வைத்து இரட்டை இலையை முடக்கப் பார்க்கின்றனர்.
நாம் பா.ம.க.,விடம் கூட்டணி பேசி முடிக்கும் தருவாயில் வந்து கலைத்துவிடுகின்றனர். பா.ம.க.,வை மிரட்டி தான் இழுத்தனர் என, கேள்விப்படுகிறேன்.
அரசியல் என்றால், இதெல்லாம் நடக்கும் தான் என்றாலும், பா.ஜ., எல்லை மீறிச் சென்றுவிட்டது. இனியும் நான் சும்மா இருக்கப் போவதில்லை. தமிழகம் முழுதும் தீவிர சூறாவளி பிரசாரம் செல்லவிருக்கிறேன். மக்களை சந்தித்து, நமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்துப் பேசப் போகிறேன். தேவையானால், பா.ஜ., தலைவர்களை, விமர்சிக்கப் போகிறேன். இனிமேல் தான் இந்த பழனிசாமி யார் என, பா.ஜ.,வுக்கு தெரியும்.
பா.ஜ., செய்தது சரிதானா என மக்களே முடிவு செய்யட்டும். அவர்கள் என்ன தீர்ப்பு எழுதினாலும் அதை ஏற்றுக் கொள்வேன்.
இப்படி, பழனிசாமி கொந்தளித்ததாக, இளங்கோவனுக்கு நெருக்கமான வட்டத்தினர் கூறுகின்றனர்.
வாசகர் கருத்து