பிரிவினை பேச்சு: நடிகருக்கு எதிர்ப்பு

பிரிவினையை துாண்டும் வகையிலும் தேச ஒற்றுமைக்கு எதிராகவும் மதுரை தேர்தல் பிரசாரத்தில் பேசியதாக நடிகர் கார்த்திக்கிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மதுரையில் அ.தி.மு.க., வேட்பாளர் சரவணனை ஆதரித்து, நடிகரும், மக்கள் உரிமை காக்கும் கட்சி தலைவருமான கார்த்திக், கீழபனங்காடியில் வேட்பாளருடன் வேனில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
அரசியலில் தலைமை பொறுப்பில் உள்ளோர் சுயநலமின்றி பொது நலனுக்காக செயல்பட வேண்டும். அரசியல்வாதிகளை நம்பி ஓட்டளிக்கும் மக்களை எப்படி ஏமாற்ற மனம் வருகிறது எனத் தெரியவில்லை. உங்கள் எதிர்காலம் உங்களிடம்தான் உள்ளது.
இந்தியர்களுக்கு யார் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக தேர்தல் நடக்கிறது. நம் நாடு திராவிட நாடு. இந்தியாவில்தான் உள்ளது. நீங்கள் எங்களை பிரிக்க நினைக்கிறீர்கள். வேண்டாம். நாங்கள் ஒன்று சேர்ந்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்.
இவ்வாறு பேசினார்.
நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக, பிரிவினையை துாண்டும் வகையில் பேசிய கார்த்திக்கிற்கு, பா.பிளாக்கின் தினகரன் பிரிவு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அதன் நிர்வாகிகள் கூறியதாவது:
தேர்தலுக்கு மட்டும் தலை காட்டும் கார்த்திக், இதுபோன்று பேசுவதை ஏற்க முடியாது. அவர், நாட்டின் ஒற்றுமையை பாதிக்கும் வகையில், பிரிவினை வாதத்தை துாண்டும் வகையில், பேசி மத்திய பா.ஜ., அரசை எச்சரிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது.
இவரை அழைத்தால் முக்குலத்தோர் ஓட்டு கிடைக்கும் என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நம்பியது அவரது அறியாமையை காட்டுகிறது. கார்த்திக் பேச்சு குறித்து தேர்தல் கமிஷன், போலீசில் புகார் அளிக்க உள்ளோம்.
இவ்வாறு கூறினர்.
வாசகர் கருத்து