கும்பகர்ண துாக்கம் விழிக்குமா காங்.,?
கோவாவில், வடக்கு கோவா, தெற்கு கோவா என்ற இரண்டு லோக்சபா தொகுதிகள், மே 7ம் தேதி நடக்கும் மூன்றாம் கட்டத்தில் தேர்தலை சந்திக்க உள்ளன. பா.ஜ., ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஒவ்வொரு தொகுதியும் முக்கியம் என்பதை காங்கிரஸ் உணர்ந்திருக்கிறதா என்பது புரியவில்லை. பல மாநிலங்களில், ஒரு கூடுதல் தொகுதிக்காக கூட்டணி கட்சிகளிடம் போராடும் நிலையில் கட்சி உள்ளது. ஆனால், கோவாவில் போட்டியிடுவது குறித்து இதுவரை அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாபில் உள்ள, 13 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்தது. அதற்கு பதிலாக கோவாவை காங்கிரசுக்கு விட்டுத் தரலாமா என்ற யோசனையில் இருந்தது.
ஆனால், தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்துவதற்கு கூட, காங்., தலைவர்கள் வரவில்லை. இதனால், ஆம் ஆத்மி கட்சி, தெற்கு கோவாவின் வேட்பாளராக, பெனாலியம் தொகுதி எம்.எல்.ஏ.,வான வென்சி வேகாஸை அறிவித்துள்ளது.
ஏற்கனவே, பிரபல தொழிலதிபர் பல்லவி டெம்போவை பா.ஜ., வேட்பாளராக அறிவித்துள்ளது. வடக்கு கோவாவில், ஐந்து முறை எம்.பி.,யான ஸ்ரீபத் நாயக் நிறுத்தப்பட்டுள்ளார். அங்கு அவர் அசைக்க முடியாத சக்தியாக உள்ளார்.
தெற்கு கோவாவில் காங்., இன்னும் கும்பகர்ண துாக்கத்தில் உள்ளது. கட்சியின் மாநில நிர்வாகிகள், கட்சித் தலைமைக்கு பலமுறை தகவல்கள் அனுப்பியும், எந்த ஒரு அசைவும் இல்லை.
இதனால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் விரக்தியில் உள்ளனர். தேர்தல் பணிகளில் ஈடுபடாமல், முடங்கி கிடக்கின்றனர்.
கடைசி நேரத்தில் காங்., வேட்பாளரை அறிவித்தால், அது பா.ஜ.,வுக்கு சாதகமாகிவிடும் என்ற அச்சத்தில் ஆம் ஆத்மி உள்ளது. பஞ்சாபில் தொகுதி தராததால், தங்களை பழிவாங்க காங்., இந்த மவுன யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதா என்ற கேள்வியும் ஆம் ஆத்மிக்கு உள்ளது.
வேட்பாளர் பெயர் அறிவிப்பதில் ஏற்பட்டுள்ள இந்த தாமதம், அந்தத் தொகுதியை, பா.ஜ.,வுக்கு தாரை வார்ப்பதற்கு சமம் என்று, காங்., தொண்டர்களும், ஆம் ஆத்மி நிர்வாகிகளும் புலம்பி வருகின்றனர்.
வாசகர் கருத்து