சீன எல்லை பிரச்னை குறித்து பிரதமர் பேசுவாரா: கனிமொழி கேள்வி
"அருணாச்சல பிரதேசத்தின் பெயரை மாற்றும் அளவுக்கு நம் நாட்டுக்குள் சீனாவை ஊடுருவ, மத்திய பா.ஜ., அரசு அனுமதித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது" என, தூத்துக்குடி தி.மு.க., வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களின் பெயர்களுக்கு புதிய பெயர்களை சூட்டி, தங்கள் வரைபடத்தில் சீனா சேர்த்துள்ளது.
சீனாவின் அத்துமீறல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், "அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஓர் அங்கம் தான். எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நமது ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு பெயரை மாற்றினால் அது சீனாவுக்கு சொந்தமாகிவிடாது. அருணாச்சல பிரதேசத்தில் நமது ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒரு பகுதியாகவே அருணாச்சல பிரதேசம் இன்றும் நேற்றும் நாளையும் தொடரும்.
நீங்கள் வசிக்கும் வீட்டை என் பெயருக்கு மாற்றிவிட்டால் அது எனக்கு சொந்தமாகிவிடாது. சீனாவின் செயல்கள், எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது" என்றார்.
இந்நிலையில், சீனாவின் அத்துமீறல் குறித்து தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "அருணாச்சல பிரதேசத்தின் பெயரை மாற்றும் அளவுக்கு நம் நாட்டுக்குள் சீனாவை ஊடுருவ, மத்திய பா.ஜ., அரசு அனுமதித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.
தங்களின் ஆதாயத்துக்காக நாட்டின் பாதுகாப்பை அடைமானம் வைத்துவிட்டதா பா.ஜ., தமிழகத்தில் ஓட்டுக்காக அவதூறுகளைப் பரப்பும் பிரதமர் மோடி, சீன எல்லை பிரச்னை குறித்து எப்போது வாய் திறப்பார்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
வாசகர் கருத்து