காங்கிரசும் தி.மு.க.,வும் கவலைப்படவில்லை: கச்சத்தீவு குறித்து ஜெய்சங்கர்
கச்சத்தீவு தொடர்பாக 21 முறை ஸ்டாலினுக்கு தான் பதில் அளித்துள்ளதாக, இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் பா.ஜ., கையில் எடுத்துள்ள கச்சத்தீவு விவகாரம், அரசியல் களத்தில் அனல் பரப்பிக் கொண்டிருக்கிறது.
கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வாங்கிய தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டார். தொடர்ந்து, கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க.,வும் காங்கிரசும் செய்த செயல்களையும் அவர் பட்டியலிட்டார்.
இந்தநிலையில், கச்சத்தீவு தொடர்பாக வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் விரிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
கச்சத்தீவு விவகாரம் நீண்டகாலமாக பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது. 1974ல் பார்லிமென்ட்டில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், இந்திய - இலங்கை அரசுகள் போட்ட ஒப்பந்தத்தின்படி இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் நிலைநாட்டப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது வெளியுறவுத்துறை செயலராக இருந்த ஸ்வரன் சிங், பாக் ஜலசந்தியில் இரு நாடுகளுக்கும் இடையே கடல் எல்லையை நிர்ணயிக்கும் இந்த ஒப்பந்தம், நியாயமானதாகவும் சமமானதாகவும் கருதப்படும் என்று நம்புகிறேன். இந்த ஒப்பந்தம் மூலம் மீன் பிடித்தல் மற்றும் புனித யாத்திரை மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவை பாதுகாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், இரண்டே ஆண்டுகளில் இந்திய மீனவர்களின் உரிமைகள் பறிபோயின. இந்திய மீனவர்களால் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க முடியவில்லை. இந்திய-இலங்கை ஒப்பந்தத்திலும், கச்சத்தீவை பொருளாதார மண்டலமாக அந்நாடு அறிவித்தது. இந்திய மீன்பிடி கப்பல்களும் இந்திய மீனவர்களும் மீன் பிடிப்பதற்கு வரக்கூடாது என அறிவித்தது.
இதன் காரணமாக, கடந்த 20 ஆண்டுகளில் 6,184 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,175 படகுகளை இலங்கை அரசு கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் எனக்குப் பலமுறை கடிதம் எழுதியுள்ளார். நான் அவருக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன்.
கச்சத்தீவை கொடுத்தபோது, மாநில அரசிடம் கலந்து ஆலோசனை செய்யவில்லை என தி.மு.க., அரசு கூறுவதை ஏற்க முடியாது. அன்று ஆட்சியில் இருந்தவர்கள் காட்டிய அலட்சியமே காரணம். அவர்கள் யாரும் கச்சத்தீவைப் பற்றிக் கவலைப்படவில்லை.
இந்த தீவை, ஒரு தொல்லையாக நேரு பார்த்தார். இதே பார்வை தான் இந்திராகாந்திக்கும் இருந்தது. அதை ஒரு சிறிய பாறை என்றும் இந்திராகாந்தி வர்ணித்தார். இந்தப் புறக்கணிப்பு மனப்பான்மை தான் இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம்.
இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து