'புருஷனுக்கும் எனக்கும் ஒரே வயிறா?' முதல்வரிடம் உரிமை தொகை கேட்ட பெண்
லோக்சபா தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் உள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று முன்தினம் இரவு சேலத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அங்கிருந்து கார் மூலம் ஈரோடு வந்தார். அங்கு ஓய்வெடுத்த முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை, 7:10 மணிக்கு தன் பிரசார வேனில் ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வந்தார்.
உழவர் சந்தை வாயிலிலிருந்து நடைபயிற்சி மேற்கொண்டு, உழவர் சந்தைக்குள் சென்றார். அங்கு காய்கறி வியாபாரம் செய்த விவசாயிகளிடம் காய்கறி விலை கேட்டு, நலமும் விசாரித்தார். காய்கறி வாங்க வந்த பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் பலரின் கோரிக்கையின் பேரில், அவர்களுடன் தனித்தனியாக 'செல்பி' எடுத்து கொண்டார்.
உழவர் சந்தைக்கு வெளியே வந்தபோது, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பாதையில் காய்கறி கடை வைத்துள்ள பலரிடமும் நலம் விசாரித்து, உதயசூரியனுக்கு ஓட்டுப் போடும்படி கேட்டு கொண்டார்.
அப்போது காய்கறி விற்ற விஜயா என்பவர், 'ஐயா வணக்கங்க... மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிச்சேன். இல்லேன்டாங்கய்யா. இரண்டாம் தடவையும் விண்ணப்பிச்சேன். கிடைக்கல. வாழ்க்க முழுசும் ரோட்டுல உட்காந்து வியாபாரம் பண்றோம்ய்யா. அதான் ஏன்னு தெரியலய்யா. எங்க வீட்ல கெவர்மென்ட் எம்ப்ளாயி. அவர் சாப்பிட்டா எனக்கு வயிறு நிரம்பிக்குமுண்ணா எனக்கு வேண்டாம்யா'என்றார்.
'காரணம் இல்லாமல் மறுக்கப்பட்டிருக்காது; என்னவென விசாரிக்கிறோம்' என கூறியபடி, முதல்வர் ஸ்டாலின் நழுவினார். இதனால் அவ்விடத்தில் சிறிது பரபரப்பானது.இதை தொடர்ந்து அவர் வேனில் ஏறி புறப்பட்டு சென்றார்.
அவர் சென்ற சில நிமிடங்களில், கட்சியினர் விஜயாவை சுற்றி வளைத்து கேள்வி கேட்டனர். அவர் மிரண்டு போனார். அருகில் இருந்த தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கட்சியினரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
மீண்டும் சில நிமிடங்களில், அவரை அணுகிய தி.மு.க.,வினர், 'மகளிர் உரிமை தொகையை நாங்கள் பெற்றுத் தருகிறோம். இதுபற்றி யாரிடமும் பேச வேண்டாம்' என, 'இறுக்கமாக' கூறி சென்றனர்.
முதல்வரிடம் பேசிய விஜயாவிடம் கேட்டபோது, ''என் கணவர் துாய்மை பணியாளர். நான் விவசாயிகளிடம் காய்கறிகளை வாங்கி, உழவர் சந்தைக்கு வெளியே அமர்ந்து விற்கிறேன். இந்த வருவாயில் குடும்பம்நடத்துகிறோம்.
''மகளிர் உரிமை தொகைக்கு, இருமுறை விண்ணப்பித்தேன். என் கணவர் துாய்மை பணியாளர் எனக்கூறி, தர மறுக்கின்றனர். எனக்கு, 1,000 ரூபாய் கிடைத்தால் உதவியாக இருக்கும்,'' என உருக்கமாகவும், அச்சத்துடனும் கூறினார்.
மேலும், தன் கணவர் பெயர், அவர் எங்கு வேலை செய்கிறார், அவர் வசிக்கும் இடம் உள்ளிட்ட விபரங்களைக் கூற மறுத்து விட்டார்.
வாசகர் கருத்து