ஒரே தட்டில் தி.மு.க., - பா.ஜ., :பாரபட்சமின்றி திட்டும் பழனிசாமி
தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.,வை மட்டும் கடுமையாக விமர்சித்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அ.தி.மு.க., ஆதரவு ஓட்டுகள் பா.ஜ., பக்கம் செல்வதை தடுக்க, தன் பிரசார பாணியை மாற்றிக் கொண்டு, பா.ஜ.,வையும் கடுமையாக விமர்சிக்க துவங்கி உள்ளார்.
தமிழகத்தில் பிரசாரத்துக்கு வந்த பிரதமர் மோடி, அ.தி.மு.க., தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை புகழ்ந்தார்; பழனிசாமி மற்றும் அ.தி.மு.க., குறித்து பேசுவதை தவிர்த்தார். அ.தி.மு.க., ஆதரவு ஓட்டுகளை கவர்வதற்கான பிரதமரின் தந்திரம் இது என்பதை தாமதமாக அ.தி.மு.க., தலைமை புரிந்து கொண்டது.
இதற்கிடையில், 'தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையில் தான் போட்டி' என, பா.ஜ.,வினர் ஓங்கி ஒலிக்கத் துவங்கினர். அ.தி.மு.க., - பா.ஜ., இடையே மறைமுக கூட்டணி தொடர்வதாக தி.மு.க.,வும் குற்றஞ்சாட்டியது. இவை எல்லாம் பொய் என நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எழுந்தது. இதனால், பழனிசாமி தன் பிரசாரத்தை தீவிரப்படுத்தினார்.
தி.மு.க., - அ.தி.மு.க., இடையில் தான் போட்டி என்ற நிலையை ஏற்படுத்த, தி.மு.க., மற்றும் அதன் தலைவரான முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். முதல்வர் ஸ்டாலினும், தன் பிரசார கூட்டங்களில் பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். கூடவே, 'களத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., இடையில் தான் போட்டி' என்றார். இரு கட்சிகளும் தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு இடமில்லை என 'கோரஸ்' பாடின.
ஆனால், பிரதமர் மற்றும் பா.ஜ., தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகத்திற்கு வர, பா.ஜ., கூட்டணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறி வருவதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து, பழனிசாமி தன் பிரசார பாணியை மாற்றியுள்ளார். தி.மு.க.,வுக்கு இணையாக பா.ஜ.,வையும் விமர்சிக்கத் துவங்கி உள்ளார்.
தி.மு.க., மற்றும் பா.ஜ.,வை விமர்சித்தால் மட்டுமே, அ.தி.மு.க., ஓட்டுகளை தக்க வைப்பதுடன், தி.மு.க., அதிருப்தி ஓட்டுகளையும் கவர முடியும் என அவருக்கு ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது. அதை ஏற்று, தி.மு.க.,வுக்கு இணையாக பா.ஜ., மீதான தாக்குதலை பழனிசாமி தீவிரப்படுத்தி உள்ளார். பொள்ளாச்சியில் நேற்று முன்தினம் பேசிய பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடி ஆகியோரை கடுமையாக விமர்சித்தார்.
அவர் பேசியதாவது:கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சி இருந்தபோது, அங்கிருந்த முதல்வர், நீர்ப்பாசனத் துறை அமைச்சர், மேகதாதுவில் அணை கட்டுவோம் என்றனர். அப்போது அண்ணாமலை வாய் திறக்கவில்லை.
மேகதாது அணை கட்டக்கூடாது என பிரதமர் கூறவில்லை. தமிழக பிரச்னையை, மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால், தமிழக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போது, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அதன் முதல்வர், நீர்ப்பாசனத்துறை அமைச்சர், மீண்டும் மேகதாது அணை கட்டுவோம் என்கின்றனர். அதை சட்டப்படி தடுப்போம் என பிரதமர் கூற மாட்டார். ஏனெனில், இப்படி கூறினால் கர்நாடகாவில் குழப்பம் ஏற்படும் என சொல்ல மாட்டார்.
சட்டப்படி நாம் கூறும் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில், இங்குள்ள பா.ஜ., தலைவர்கள் பேச மாட்டார்கள். பா.ஜ.,வில் புதிதாக ஒரு தலைவர் வந்துள்ளார். அவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.
அவர் விமானத்தில் ஏறும்போது ஒரு பேட்டி கொடுப்பார்; இறங்கும்போது ஒரு பேட்டி கொடுப்பார். பேட்டி கொடுப்பது தான் அவர் வேலை. பேட்டி கொடுத்து மக்களை நம்ப வைத்து, ஓட்டுகளை பெற முயற்சி செய்கிறார். இது, தமிழக மக்களிடம் எடுபடாது.
தமிழக மக்கள் அறிவுத்திறன் படைத்தவர்கள். எது சரி, எது தவறு என, எடை போட்டு பார்த்து தீர்ப்பளிக்கக்கூடியவர்கள். இந்த ஏமாற்று வேலை எல்லாம் தமிழகத்தில் எடுபடாது. யார் யாரோ வந்து, ஏதேதோ பேசி, மக்களை குழப்பி, அந்த குழப்பத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். அது ஒருபோதும் தமிழகத்தில் நடக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து