தமிழக காங்., தொகுதிகளில் 'இடியாப்ப சிக்கல்' : கோஷ்டிகள் போட்டியால் கடும் குஸ்தி

தி.மு.க., கூட்டணி கட்சிகளில், காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளில் இடியாப்ப சிக்கல் உருவாகியதோடு, மாற்றம் செய்யப்போகும் தொகுதிகளை கைப்பற்ற, கோஷ்டிகள் மத்தியில் 'குஸ்தி' போடும் நிலை உருவாகியுள்ளது.

தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று புதுச்சேரி.

கடந்த லோக்சபா தேர்தலில் தேனியை தவிர, எட்டு தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. திருவள்ளூர் தனித் தொகுதியில் ஜெயகுமார் எம்.பி.,யாக உள்ளார்.

சமீபத்தில் தலித் காங்கிரஸ் கருத்தரங்கத்தில், தனித் தொகுதி விவகாரம் தொடர்பாக, அவர் சர்ச்சையாக பேசினார். அதனால், மீண்டும் சீட் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, திருவள்ளூர் தொகுதிக்கு அகில இந்திய காங்கிரஸ் செயலர் விஸ்வநாதன், காங்கிரஸ், 'வார்ரூம்' சேர்மன் சசிகாந்த் செந்தில், எஸ்.சி., துறை தலைவர் ரஞ்சன்குமார் ஆகியோர் மல்லுகட்டுகின்றனர்.

ஏற்கனவே காங்.,குக்கு ஒதுக்கப்பட்ட ஆரணி தொகுதிக்கு பதிலாக, அரக்கோணம் அல்லது கள்ளக்குறிச்சி தொகுதியை ஒதுக்கித் தருகிறோம் என, தி.மு.க., தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு தொகுதிகளில், எந்த தொகுதி ஒதுக்கினாலும், ஆரணி எம்.பி., டாக்டர் விஷ்ணுபிரசாத், முன்னாள் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், துணைத் தலைவர் ராம.சுகந்தன், மகளிர் அணி மாநிலத் தலைவர் சுதா ராமகிருஷ்ணன், மாநில நிர்வாகிகள் வசந்தராஜ், சுமதி அன்பரசு, தளபதி பாஸ்கர் போன்றவர்கள் போட்டியிட விரும்புகின்றனர்.

இந்த ஒரு தொகுதிக்கு மல்லுகட்டும் கோஷ்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவர்கள் குஸ்தி போடும் நிலை உருவாகி உள்ளது.

கரூர் தொகுதிக்கு பதிலாக, ஈரோடு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க தி.மு.க., முடிவெடுத்துள்ளது. அப்படி ஈரோடு ஒதுக்கப்பட்டால், அத்தொகுதியில் கரூர் எம்.பி., ஜோதிமணி, அகில இந்திய காங்கிரஸ் செயலர் மயூரா ஜெயகுமார், மோகன் குமாரமங்கலம் ஆகியோர் வேட்பாளராகத் துடிக்கின்றனர்.

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ போட்டியிட இருப்பதால், அத்தொகுதிக்கு பதிலாக மயிலாடுதுறை தொகுதியை காங்.,கிற்கு ஒதுக்க தி.மு.க., விரும்புகிறது.

மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கினால், திருச்சி எம்.பி., திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுனர்கள் அணி தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, மாணவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிட விரும்புகின்றனர்.

இதற்கிடையில், தேனி எங்களுக்கு வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக தென்காசி தனித் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்றும், தமிழக காங்கிரஸ் தலைமை தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.

அத்தொகுதியும் ஒதுக்கப்பட்டால், அங்கே முன்னாள் எம்.பி., விஸ்வநாதன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் ஆகியோர் சீட் கேட்டு முட்டி மோதுவர்.

வட மாவட்டங்களில் ஆரணிக்கு பதிலாக கடலுாரைக் கேட்கிறது காங்., இதனாலும் காங்., கட்சியில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்