விஸ்வரூபம் எடுக்கும் கச்சத்தீவு விவகாரம்: மீரட்டில் கொந்தளித்த மோடி
"ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். இது சிலரை கவலையடைய வைத்துள்ளது. அவர்களிடம் மோடி பயப்படுவார் என நினைக்கிறார்கள். இந்தியா தான் எனது குடும்பம். எனக்கு யார் மீதும் பயம் இல்லை" என பிரதமர் மோடி பேசினார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட்டில் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
லோக்சபா தேர்தலில் மக்கள் வழங்கும் தீர்ப்பு இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாற்றப் போகிறது. உலக அளவில் பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்தோம். அதை 5வது இடத்துக்குக் கொண்டு வந்தோம். நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டனர்.
மூன்றாவது இடத்தை அடையும் போது, நாட்டில் வறுமை ஒழியும். அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டங்களை உருவாக்கி வைத்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட வளர்ச்சி, மேலும் அதிகரிக்கும். பா.ஜ., ஆட்சியில் வளர்ச்சியின் டிரெய்லரை தான் பார்த்தீர்கள். நாட்டை இன்னும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.
ஊழலுக்கு எதிராக நான் நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். இது சிலரை கவலையடைய வைத்துள்ளது. அவர்களிடம் மோடி பயப்படுவார் என நினைக்கிறார்கள். இந்தியா தான் என் குடும்பம். எனக்கு யார் மீதும் பயம் இல்லை.
நாட்டை ஊழல்வாதிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக ஒவ்வொரு அடியையும் எடுத்து வருகிறேன். அதனால் தான் ஊழல்வாதிகள் இன்று சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் உள்ளனர்.
எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஊழல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டைக் கொள்ளையடித்தவர்கள், அந்தப் பணத்தைத் திருப்பித் தர வேண்டும்.
இன்று காங்கிரஸின் மற்றொரு தேசவிரோத நடவடிக்கை, வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்திய கடற்கரையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் தமிழகத்தில் கச்சத்தீவு என்றொரு தீவு உள்ளது. இந்தத் தீவு நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தத் தீவு தேவையற்றது எனக் கூறி இலங்கைக்கு தாரைவார்த்தது.
காங்கிரசின் இந்த செயலுக்கு நாடே விலை கொடுத்து வருகிறது. இந்த தீவை நோக்கிச் செல்லும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இந்த தவறு குறித்து காங்கிரஸ், தி.மு.க., போன்ற கட்சிகளும் மௌனம் சாதிக்கின்றன. இப்படிப்பட்ட இண்டியா கூட்டணி, நாட்டின் நலனுக்கான முடிவுகளை எடுக்குமா?
இவ்வாறு மோடி பேசினார்.
வாசகர் கருத்து