Advertisement

'இண்டியா' கூட்டணியை குலைத்துவிட முடியாது: மோடிக்கு ஸ்டாலின் சவால்

"தோல்வி பயத்தில் எதைச் செய்வது, எதைச் செய்யக் கூடாது என்பதே தெரியாமல் மூர்க்கத்தனமான சர்வாதிகார நடவடிக்கைகளை பா.ஜ., செய்து வருகிறது" என, தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனைக் கண்டித்து ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கண்டன போராட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், தி.மு.க., எம்.பி., திருச்சி சிவா பங்கேற்று முதல்வர் ஸ்டாலினின் அறிக்கையை வாசித்தார். அதில் அறிக்கையில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

தனக்கு எதிராக 'இண்டியா' என்ற கூட்டணியை எதிர்க்கட்சிகள் அமைத்தது முதல் நிலைகொள்ளாமல் தவறுகளுக்கு மேல் தவறுகளைச் செய்து வருகிறது பா.ஜ., இண்டியா கூட்டணித் தலைவர்கள் அனைவரையும் ஏதோ இந்த நாட்டின் எதிரிகளைப் போல நடத்தத் தொடங்கினர்.

பா.ஜ., அல்லாத மாநிலங்களை ஆளும் அரசுகளை, மிகமோசமாக நடத்தினார்கள். ஆட்சிகளைக் கவிழ்ப்பது, கூட்டணிகளை உடைப்பது, எம்.எல்.ஏ.க்களை இழுப்பது என அனைத்து செயல்களையும் செய்தார்கள்.

அதன்பிறகு, சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி மிரட்டுகிறார்கள். இதில் மிரண்டு பா.ஜ.,வில் ஐக்கியம் ஆகிறவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பா.ஜ.,வுக்கு அடங்காதவர்களாக இருந்தால் அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். இது இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டதைப் போல இருக்கிறது.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை முதலில் கைது செய்தார்கள். இப்போது டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் 'இண்டியா' கூட்டணியின் முக்கியத் தலைவர்கள். இவர்களைக் கைது செய்வதன் மூலமாக 'இண்டியா' கூட்டணியை குலைத்துவிட முடியாது.

இது போன்ற கைதுகள், மிரட்டல்கள் அனைத்தும் 'இண்டியா' கூட்டணியை வலிமையாக ஆக்கியதே தவிர பலவீனப்படுத்தவில்லை. சில மாதங்களுக்கு முன்பு வரை வெற்றி பெற்றுவிடுவோம் என்று பா.ஜ., கருதியது. ஆனால் நாளுக்கு நாள் தோல்வியை நோக்கி வேகமாக பயணித்து வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம், பொது சிவில் சட்டம், ராமர் கோவில் என்று அடுக்கடுக்காக தனது அஜெண்டாவை பா.ஜ., அவிழ்த்துவிடக் காரணம், இதில் ஏதாவது ஒன்றாவது தன்னைக் காப்பாற்றாதா என்ற ஆசை தான். இவை எதுவும் பா.ஜ.,வுக்கு கை கொடுக்கவில்லை. அதனால் தான் இண்டியா கூட்டணித் தலைவர்களைக் குறி வைத்தார்கள்.

அதாவது, தோல்வி பயத்தில் எதைச் செய்வது, எதைச் செய்யக் கூடாது என்பதே தெரியாமல் மூர்க்கத்தனமான சர்வாதிகார நடவடிக்கைகளை பா.ஜ., செய்து வருகிறது.

தேர்தல் சுற்றுப்பயணம் செய்து பா.ஜ.,வுக்கு எதிராக கெஜ்ரிவால் பிரசாரம் செய்தால் அவர் கருத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதை நினைத்து, அவரது பிரசாரத்தை தடுக்கும் முயற்சியாகவே அவரைக் கைது செய்துள்ளனர்.

' 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறப் போகிறவர், எதற்காக இப்படி நடந்து கொள்ள வேண்டும்' என்று நடுநிலையாளர்கள் கேட்கிறார்கள். இதுவரை மோடி ஆதரவாளர்களாக இருந்தவர்கள் கூட, கெஜ்ரிவால் கைதுக்குப் பிறகு மோடியை விமர்சிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்பதே உண்மை.

சரிந்து கொண்டிருந்த மோடியின் செல்வாக்கை கெஜ்ரிவால் கைது நடவடிக்கை இன்னும் அதிகமாக சரித்துவிட்டது. அவர் சிறைக்குள் இருந்து ஆட்சியை மட்டும் நடத்தவில்லை, இண்டியா கூட்டணியின் எழுச்சிக்கும் தூண்டுதலாக அமைந்து விட்டார்.

கெஜ்ரிவாலை கைது செய்வதன் மூலமாக 'இண்டியா' கூட்டணித் தலைவர்களை மிரட்டிப் பார்க்க நினைத்தால் பிரதமர் நரேந்திரமோடி ஏமாந்து போவார்.

நாடு முழுவதும் நடக்கும் அனைத்து அசைவுகளையும் மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாரகள். அடக்குமுறை மூலமாக யாரும் வென்றதாக வரலாறும் இல்லை. 'இண்டியா ' கூட்டணியின் ஒற்றுமையால் மட்டுமே மோடியை வீழ்த்த முடியும்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்