நாட்டுக்கோழி இல்லாத உணவு வேண்டாம் : சீமான் அறிவுரை
'நாட்டுக்கோழி இறைச்சி இல்லாமல் மதிய உணவை ஏற்பாடு செய்ய வேண்டாம்' என, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நாம் தமிழர் கட்சி தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கன்னியாகுமரியில் பிரசாரம் துவங்கியுள்ளார்.
சீமானுடன், கட்சியின் மூத்த நிர்வாகிகள், அரசியல் ஆலோசகர், உதவியாளர் மட்டுமின்றி, பாதுகாப்பிற்காக 15க்கும் மேற்பட்ட 'பவுன்சர்'கள் வலம் வருகின்றனர். பிரசாரத்திற்கு செல்வதற்கு முன், அந்தந்த மாவட்டத்தின் முக்கிய நிர்வாகியை, தலைமை அலுவலக நிர்வாகிகள் தொடர்பு கொண்டுள்ளனர்.
சீமான் மற்றும் அவருடன் வருபவர்கள் எங்கு தங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்; காலை, மதியம் மற்றும் இரவு உணவில் என்னென்ன இடம்பெற வேண்டும் என்ற பட்டியலை கொடுத்துள்ளனர்.
காலை உணவில் பொங்கல், இட்லி, தோசை, பூரி மட்டுமின்றி, சிறுதானியங்களில் தயாரிக்கும் உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், தயிர், இரண்டு வகை காய்கறிகள் இடம்பெற வேண்டும். நாட்டுக்கோழி குழம்பு, வறுவல், சுக்கா, உப்பு கறி ஆகியவற்றில் ஏதாவது ஒன்று கட்டாயம் இடம்பெற வேண்டும்
இரவு உணவில் தோசை, சப்பாத்தி மட்டுமின்றி, அந்த ஊரின் சிறப்பு அசைவ உணவுகள் இடம்பெற வேண்டும்.
சாப்பிட்டு முடிக்கும்போது, 'பினிஷிங் டச்சாக' தயிர் சாதம் நிச்சயம் தர வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
வழக்கமாக சீமான் கட்சி பணிகளுக்காக செல்லும்போது, மாவட்ட நிர்வாகிகள் இதற்கான செலவை ஏற்பது வழக்கம்.
இம்முறை, வேட்பாளர்களின் தலையில் தங்கும் இடம், உணவு செலவை கட்டிவிட்டு, மாவட்ட நிர்வாகிகள் ஒதுங்கி நிற்கின்றனர். சீமான் தான் இதை கேட்கிறாரா அல்லது அவருடன் வருபவர்கள் உற்சாகமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்படுகிறதா என்று தெரியாமல், வேட்பாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியில் வேட்பாளர்களாக இருக்கும் பலரும் லட்சாதிபதிகள் என்பதால், இப்படிப்பட்ட செலவை ஏற்க தயாராகிவிட்டனர்.
வாசகர் கருத்து