எங்கள் எதிரி அ.தி.மு.க., தான் பா.ஜ., அல்ல: ஆர்.எஸ்.பாரதி சிறப்பு பேட்டி

அரசியல் ரீதியாக தி.மு.க., தொடுத்த பல வழக்குகளில் ஆஜராகி, வெற்றி தேடித் தந்த மூத்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி. தற்போது, தி.மு.க.,வின் அமைப்பு செயலராக இருக்கிறார். தமிழகம் முழுதும் தி.மு.க., நிர்வாகிகளுக்கு மத்தியில் அடிக்கடி ஏற்படும் உட்கட்சி பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கண்டு, கட்சி தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்கும் ஆர்.எஸ்.பாரதியின் சிறப்பு பேட்டி:

'நான் கட்சியில் சேர்த்து விட்டவர்கள் அமைச்சர்கள், எம்.பி.,க்களாகி விட்டனர். ஒரே கொடி, ஒரே கட்சியில் இருந்த எனக்கு 69வது வயதில் தான் ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைத்தது; உழைப்பவர்களுக்கு பதவியில்லை' என, நீங்கள் பேசினீர்கள். இதற்கு கட்சி தலைமை என்ன பதில் தந்தது?

அரசியல்வாதிகளுக்கு பொறுமை அவசியம். கட்சிக்கு உழைப்பதை கடமையாக நினைத்து செய்ய வேண்டும். உழைக்கிற உழைப்புக்கு உரிய மரியாதை, அங்கீகாரமெல்லாம் எப்போதாவது ஒரு நாள் நிச்சயமாக கிடைக்கும்.

அதற்கு உதாரணமாக நான் இருக்கிறேன். என் 69வது வயதில் தான் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டேன். பதவி என்பது உரியவர்களுக்கு உரிய நேரத்தில் கண்டிப்பாக கிடைக்கும் என்பது உறுதி. இப்படி தான் அறிவுரை கூறி பேசினேன். அது என் உள்ளக் குமுறல் கிடையாது.

பதவி என்பது, 5 ஆண்டுகாலம் எம்.எல்.ஏ.,வாக இருப்பது மட்டுமல்ல. அப்பதவி கிடைக்கவில்லை என்பதற்காக, கட்சி மாறுகிறவர்களும், வளர்த்து விட்ட கட்சியை காட்டிக் கொடுப்பவர்களும், விமர்சிப்பவர்களும் அரசியலில் வெற்றி பெற்றதாக சரித்திரமில்லை.

தி.மு.க.,வில் இருந்தபோது வைகோவும், திருச்சி சிவா போன்றவர்களும் மீண்டும் மீண்டும் எம்.பி.,யாக்கப்பட்டனர். அவர்களை போல தங்களுக்கு இரண்டாவது முறை ராஜ்யசபாவில் வாய்ப்பு தரவில்லையே ஏன்?

மீண்டும் வாய்ப்பு தருவதும், தராமல் இருப்பதும் கட்சியின் முடிவு. வைகோவை மீண்டும் மீண்டும் எம்.பி.,யாக்கி, கருணாநிதி அழகு பார்த்தார். அவரது காலம் வேறு. திருச்சி சிவா இடைவெளி விட்டு தான் மீண்டும் எம்.பி.,யானார்.

எனக்கு எம்.பி., பதவியை விட, கட்சியில் அமைப்பு செயலர் என்ற பதவியை தந்ததற்கு பெருமைப்படுகிறேன். காரணம், இந்த பதவிக்கு நான் மட்டும் தான் இருக்கிறேன். கருணா நிதியின் காலத்தில் அமைப்பு செயலராக மு.க.அழகிரி, டி.கே.எஸ்.இளங்கோவன், கல்யாண சுந்தரம் என, மூன்று பேர் இருந்தனர். கட்சி பணிகளையும் முழுதும் கவனிக்க வேண்டியிருக்கிறது. அமைப்பு ரீதியான பணிகளும் மேற்கொள்ள வேண்டும். மாவட்ட வாரியாக உட்கட்சி பிரச்னைகளை இரு தரப்பினரிடம் பேசி சமரசப்படுத்த வேண்டும்.

எதிர்க்கட்சிகள் தருகிற அரசியல் ரீதியான விமர்சனங்களை எதிர்கொண்டு, அதற்கு பதில் தரும் பணியை மேற்கொள்ள வேண்டும். இப்படி, 24 மணி நேரமும் கட்சி பணிகளை செய்ய வேண்டிய பதவி வகித்து வருகிறேன். இதனால், ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுவதற்கு அவசியமுமில்லை; நேரமுமில்லை.

ஆலந்துார் சட்டசபை தொகுதி, தென் சென்னை லோக்சபா தொகுதியில் ஒரு முறை போட்டியிட்டு தோல்வி அடைந்தீர்கள். அதன்பின், தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியதற்கு என்ன காரணம்?

கடந்த 1984ல் நடந்த தேர்தலில் ஆலந்துார் தொகுதியை சேர்ந்த என்னை, மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட, கருணாநிதி கட்டளையிட்டார். மறுப்பு பேசாமல் போட்டியிட்டேன். ஆலந்துார் நகராட்சி தலைவராக, நான்கு முறை இருந்துள்ளேன். தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளின் தலைவர்களின் சங்கத்திற்கும் தலைவராகவும் இருந்துள்ளேன்.

கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தோல்விக்கு பின், 2016ல் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 2022 வரை அப்பதவியில் இருந்தேன். அதனால் தான், கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியவில்லை. இது தான் காரணமே தவிர, தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிவிடவில்லை.

'எம்.ஜி.ஆரை பார்ப்பது போல் உதயநிதியை மக்கள் பார்க்கின்றனர்' என்கிறீர்கள். உதயநிதி அந்த அளவிற்கு மக்களோடு நெருக்கமாக இருக்கிறாரா? ஒரு சில அரசு நிகழ்ச்சிகள் தவிர அவர் களத்திற்கு வருவதில்லையே?

எம்.ஜி.ஆரும் நடிகராக இருந்து முதல்வர் பதவி ஏற்றார். உதயநிதியும் நடிகராக இருந்து அமைச்சராகியுள்ளார். உதயநிதியின் பிரசார கூட்டத்தை, இரண்டு, மூன்று, 'டிவி'க்களில் பாருங்கள். மக்கள் கூட்டம் திரண்டு வருகிறது. நான் சொன்னது உண்மை என்பது பொது மக்களுக்கு தெரியும்.

'ஆதிதிராவிடர்களுக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை' என்று பேசினீர்கள். பட்டியலினத்தவர்கள் மீது, தி.மு.க.,வுக்கு அக்கறை இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. நிரூபிக்கும் வகையில், இந்த முறையும் வி.சி.,க்கு பொதுத்தொகுதி கொடுக்காமல் மறுத்து விட்டீர்களே...

தி.மு.க., சார்பில் பொதுத்தொகுதியில் பட்டியலினத்தவரை போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்திருக்கிறோம். கடந்த 1984ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஆலந்துார் தொகுதியில் ஆபிரகாம் என்ற பட்டியலினத்தவரை எம்.எல்.ஏ.,வாக்கினோம்.

கடந்த 1996ம் ஆண்டு தேர்தலில், கோவை தொகுதியில் சி.டி.தண்டபாணியை நிறுத்தி வெற்றி பெற வைத்தோம். உள்ளாட்சி தேர்தலில், பொதுத் தேர்தலில், ஆதிதிராவிடர் சமுதாயத்தினருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளோம். நீண்ட பட்டியலை வெளியிட முடியும்.

தமிழக அரசில் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் பலர், பட்டியலினத்தை சேர்ந்தவர்கள். வரலாறு காணாத வகையில் அதிகாரமிக்க பதவிகளில் இருக்கின்றனர். முதல்வரின் தனிச் செயலர்களில் ஒருவரும் பட்டியலினத்தை சேர்ந்தவர். தலைமை செயலரும் பழங்குடியினத்தை சேர்ந்தவர் தான்.

'நான் செத்தாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டேன்' என, துரை வைகோ அழுதபடி பேசியதற்கு என்ன காரணம்? உதயசூரியன் மீது அவருக்கு அப்படி என்ன வெறுப்பு?

இந்த கேள்வியை அவரிடம் தான் கேட்க வேண்டும். உதயசூரியன் சின்னம் வெற்றி சின்னம். அதே சமயம், கூட்டணி கட்சிகளிடம் அதை திணிக்க மாட்டோம். அது அவர்களுடைய விருப்பம்.

சட்டசபை தேர்தலுக்கு முன் கோடநாடு வழக்கில் பழனிசாமி கைது செய்யப்படுவார் என்றும், ஊழல் வழக்கில் 'மாஜி' அமைச்சர்கள் சிறை செல்வர் என்றும், முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். நாங்கள் சொல்வதை தான் செய்வோம்; செய்வதை தான் சொல்வோம் என்பீர்கள். ஆனால், 3 ஆண்டுகள் ஆகியும் சொன்னதை செய்யாமல் இருப்பது ஏன்?

மக்களுக்கான நலத் திட்டங்களை செய்து கொடுப்பதை தான் முன்கூட்டியே சொல்வோம்; சொல்வதையும் செய்து காட்டியிருக்கிறோம். அதற்கும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் முடிச்சு போடக் கூடாது.

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் கூட, 19 ஆண்டுகள் கழித்து தான் தண்டனை கிடைத்தது. சசிகலா, இளவரசி, சுதாகரன் போன்றவர்களும், முன்னாள் அமைச்சர் பொன்னுசாமியும் தண்டனை அனுபவித்து விடுதலையாகி உள்ளனர்.

தி.மு.க.,விற்கு எதிரி அ.தி.மு.க.,வா அல்லது பா.ஜ.,வா?

அ.தி.மு.க.,வோடு தான் எங்களுக்கு நேரடி போட்டி. தேர்தல் களத்தில் இரு முனைப் போட்டி தான் இருக்கும். எதிரியிடம் மோதும்போது தான் பலம் தெரியும்.

கமலுக்கு தி.மு.க., ஏன் எந்த தொகுதியும் வழங்கவில்லை?

அவருக்கு ராஜ்யசபா எம்.பி., 'சீட்' வழங்கும் முடிவு, இரு தலைவர்களும் பேசி எடுத்த முடிவு.

மறந்து போன பேச்சு

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளை, ஒரே துறையின் கீழ் கொண்டு வருவோம்' என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது; நிறைவேற்றவில்லை. எங்கள் சிக்கல்களையும் மன வேதனைகளையும் புரிந்து கொள்வதே கிடையாது.- ஜி.ராஜேந்திரன் தமிழக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத் தலைவர்



அதிருப்தி எதிரொலிக்கும்

14வது புதிய ஊதிய ஒப்பந்தம் இன்னும் போடவில்லை. தேர்தல் அறிவிப்புக்குமுன் ஊதிய ஒப்பந்த பேச்சு துவங்க வேண்டும். கோரிக்கைகள் தீர்க்கப்படாததால், தேர்தலில் தி.மு.க.,வுக்கு எங்கள் எதிர்ப்பை பதிய வைப்போம். - கமலக்கண்ணன், செயலர், அ.தொ.பே.,



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்