சர்வாதிகார நாடுகளில் தான் இப்படி நடக்கும்: ரூ.1,823 கோடி அபராதத்தால் காங்., கொதிப்பு
வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ததில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட காரணங்களுக்காக 1,823 கோடி ரூபாயை அபராதமாக கட்டுமாறு. காங்கிரசுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த வாரம், காங்கிரசின் நான்கு வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது. மேலும், 2018-2019 நிதியாண்டில் வருமான வரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்த காரணத்தால் காங்கிரசுக்கு 210 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவதற்கு காங்கிரஸ் தயாராகி வந்தது.
இந்நிலையில், '1,823 கோடி ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும்' என வருமான வரித்துறையில் இருந்து வந்த நோட்டீஸ், காங்கிரஸ் நிர்வாகிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
அதில், 2017-2018 நிதியாண்டு முதல் 2020-2021 வரையிலான காலகட்டத்தில் முறையாக வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யாததால், வட்டியுடன் கூடிய அபராதமாக 1,823 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, காங்கிரசின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது குறித்துப் பேட்டி அளித்த ராகுல் காந்தி, "தேர்தலுக்கு முன்னதாக, 2 பழைய நோட்டீஸ்கள் வருகின்றன. 14 லட்ச ரூபாய் வருமான வரி பிரச்னைக்காக, எங்களின் ஒட்டுமொத்த பொருளாதார அடையாளமும் பறிக்கப்படுகிறது.
காங்கிரசின் மீது பிரதமர் மோடியும் அமித் ஷாவும் கிரிமினல் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்ற கருத்தியல் பொய்யாக்கப்பட்டுள்ளது. நாட்டில் 20 சதவீத வாக்குகள் உள்ள எங்களால் 2 ரூபாயைக் கூட எடுக்க முடியாத அளவுக்கு வங்கிக் கணக்கை முடக்கிவிட்டனர்.
முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய பிரச்னைக்காக தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்னர் வங்கிக் கணக்கை முடக்கியது என்பது திட்டமிட்ட செயல்" எனப் பேசியிருந்தார்.
தற்போது அபராதம் விதிக்கப்பட்டிருப்பது குறித்து, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:
காங்கிரசை அழிப்பதற்கு நடக்கும் முயற்சி இது. தனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் போது சிறு சிறு பிழைகள் வரலாம். அதற்கு வரி அல்லது அபராதத்தை விதிப்பார்கள். சிறு பிழைகள் வந்துவிட்டன என்பதற்காக தனி நபர்களை அழிப்பது கிடையாது.
காங்கிரஸ் தாக்கல் செய்த கணக்கில், '14 லட்ச ரூபாய் சரியாக வரவில்லை' என முதல் நோட்டீஸை கொடுத்தார்கள். அது விஸ்வரூபம் எடுத்து, ஒவ்வொரு கணக்கிலும் பிழை தொடர்வதாக 30 ஆண்டுகாலத்தை கணக்கில் எடுத்துள்ளனர்.
30 ஆண்டுகால கணக்குகளுக்கு இவர்கள் 10 ஆயிரம், 20 ஆயிரம் கோடி ரூபாய்களைக் கூட அபராதமாக விதிப்பார்கள். இது பிற கட்சிகளுக்கும் ஓர் எச்சரிக்கை. இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் சர்வாதிகார நாடுகளில் தான் நடக்கும்.
நான் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். ஒவ்வொரு கட்சியாக இவர்கள் ஒழிப்பார்கள். இந்தியாவில் முதல்வரை கைது செய்ய அனுமதிக்கும்போது எதுவும் நடக்கும்.
இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
வாசகர் கருத்து