ரூ.500 கொடுத்தும் சிக்காத வடமாநிலத்தவர்
திருப்பூர் நிறுவனங்களில், பல்வேறு மாநிலங்களில் இருந்து, வடமாநிலத்தவர் குடும்பத்தினருடன் வந்து பணியாற்றி வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்களாக இருந்த போதும், தமிழில் திக்கித்திணறி பேசுகின்றனர்.
பேசுவதை புரிந்து கொள்ளும் அளவுக்கான தமிழை அறிந்த வடமாநில தொழிலாளர்களை வைத்து பிரசாரம் செய்ய, வாடகை வீடுகளில் குழுவாக தங்கியிருப்போரை அணுகி, கட்சியினர் பலர் வலைவிரிக்கின்றனர்.
ஆனால், பனியன், கட்டுமானம் உட்பட பல்வேறு தொழில்களில் ஒப்பந்த அடிப்படையில் தொடர்ந்து பணிக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்கள், 'வேலையை விட்டு வர முடியாது' என நழுவி வருகின்றனர்.
கட்சி பிரசார கூட்டம், பொதுக்கூட்டங்களுக்கு கூட்டமாக ஆட்களை அழைத்து செல்லும் ஏஜன்ட் ஒருவர் கூறியதாவது:
அரசியல் தொடர்புடைய பிரசார பொதுக்கூட்டம் என்றாலே, வடமாநில தொழிலாளர்கள் தெறித்து ஓடுகின்றனர். பெரும்பாலோர் ஒன்று, மூன்று, ஆறு மாதங்கள் என ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருவதால், பணியை விட்டுவிட்டு பிரசாரத்துக்கு வர மறுக்கின்றனர்.
பெரும்பாலும், 10 முதல் 20 பேர் வரை ஒரு குழுவாக பணியாற்றுவதால், பிரிவதில்லை. தலைக்கு, 500 ரூபாய் கொடுத்தாலும், பிரசாரத்துக்கு வருவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுக்கு என்ன?
திருப்பூரில் மாலை நேரங்களில் தேர்தல் பிரசார கூட்டம், பொதுக்கூட்டம் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் கூட்டம் நடக்குமிடங்கள் வழியாக நடந்து செல்லும் வடமாநிலத்தினர் பலர், என்ன நடக்கிறது என்பதை கூட திரும்பி பார்ப்பதில்லை.
தமிழக அரசியல் மீது ஆர்வமில்லை என்றாலும் கூட, 'இது நம்ம மாநிலம் இல்லை. அதனால், நமக்கு இதில் என்ன தெரியப் போகிறது'என்பதால் ஒதுங்கிக்கொள்கின்றனராம்.
வாசகர் கருத்து