72 ஆயிரமா... 7 லட்சமா: தங்க தமிழ்ச்செல்வனின் தப்புக்கணக்கு
தேர்தல் பிரசாரத்தில் சிலிண்டர் விலை தொடர்பான புள்ளிவிபரத்தை தவறாக கூறி, தங்க தமிழ்ச்செல்வன் வாக்கு கேட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேனியில் நடந்த பிரசார கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் பேசியதாவது:
லோக்சபா தேர்தல் முடிவுக்குப் பின், இண்டியா கூட்டணி மெஜாரிட்டியாக வெற்றி பெற்ற பிறகு நாங்கள் 543 எம்.பி.,க்களும் சேர்ந்து யார் பிரதமராக வர வேண்டுமோ அவரை தேர்வு செய்வோம்.
அதன்பின், சிலிண்டரை 500 ரூபாய்க்கு கொடுப்போம். இதன்மூலம், மாதம் 600 ரூபாய் மிச்சமாகும். இது நமக்கு பெரிய தொகை. நம்மைப் போன்ற நடுத்தர மக்களுக்கு சத்தியமாகவே இது பெரிய தொகை.
பெட்ரோலை 70 ரூபாய்க்கு விற்கும்போது 35 ரூபாய் மிச்சமாகும். ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 105 ரூபாய். 1 லிட்டருக்கு குறைவாக யாரும் பெட்ரோல் போட மாட்டார்கள். 10 வருடங்களாக மோடி அரசு நம் பணத்தைக் கொள்ளையடித்து வருகிறது.
சிலிண்டருக்கு 10 வருஷமாக 600 ரூபாயை கூடுதலாக கொடுத்து வருகிறோம். 10 வருஷத்துக்கு 120 மாதங்கள் எனக் கணக்கு போட்டால் எவ்வளவு வரும்... எனக்கு கணக்கு வராது. மொத்தமாக கணக்கு போட்டால் 7,20,000 ரூபாய் வருகிறது.
ஒரு நபர் மட்டுமே சிலிண்டருக்கு 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை மத்திய அரசுக்குக் கொடுத்திருக்கிறோம். இது ஏழைகளுக்கான அரசு அல்ல. உங்கள் கஷ்டத்தை உணர்ந்து மாதம் 500 ரூபாய்க்கு சிலிண்டர் கொடுப்பதாக ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அவர் சொன்னதை செய்யக் கூடியவர்.
மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு என எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். நீங்கள் அழைத்த குரலுக்கு ஓடோடி வரக் கூடிய என்னை, உங்கள் சொந்தக்காரனாக நினைத்து ஓட்டுப் போடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து