பறக்கும் படையா? பறிக்கும் படையா?
தேர்தலையொட்டி வாகன சோதனை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களுக்கு, எந்தவிதமான வழிகாட்டு நெறிமுறைகளும் இல்லாததால், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அவை செயல்படுகின்றன. இதனால், பொதுமக்களும் வியாபாரிகளும் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக, தேர்தல் கமிஷனில் புகார்கள் குவிகின்றன.
வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பது, ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, தேர்தல் கமிஷன் எடுத்த நடவடிக்கை தான் இந்த வாகன சோதனை. அதனால், அரசியல்வாதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. சாதாரண மக்கள், வியாபாரிகளே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், மூன்று பறக்கும் படைகள், மூன்று நிலை கண்காணிப்பு குழுக்கள், ஒரு வீடியோ 'டீம்' அமைக்கப்பட்டன. பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவில், தாசில்தார் அந்தஸ்துள்ள அதிகாரி ஒருவர், தலா ஒரு சப் - இன்ஸ்பெக்டர், காவலர், வீடியோகிராபர், டிரைவர் ஆகியோர் உள்ளனர்.
இவர்கள், 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனையின்போது, 50,௦௦௦ ரூபாய்க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால், பறிமுதல் செய்யவும், பரிசுப் பொருட்கள், நகைகள், துணிகள் போன்றவற்றை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றால், அவற்றை பறிமுதல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணம், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பிடிபட்டால், வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. மற்ற பொருட்கள், மாவட்ட தேர்தல் அலுவலரால் நியமிக்கப்பட்டுள்ள, மூன்று அதிகாரிகள் அடங்கிய குழுவிடம் தெரிவித்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படுகின்றன. பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணம் மற்றும் பொருட்களை, உரிய ஆவணங்களை காண்பித்து திரும்ப பெற, மாவட்ட கலெக்டர் நியமித்துள்ள குழுவை அணுக வேண்டும்.
அவர்களிடம் ஆவணங்களை காண்பித்து, பொருட்களை திரும்பப் பெற காலதாமதம் ஏற்படுகிறது. இது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
சோதனையின்போது பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால், அவற்றை எடுத்து செல்பவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்தால், திரும்ப ஒப்படைக்க, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.
ஆனால், பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினருக்கு, உரிய ஆவணங்கள் என்றால் என்ன என்பதே தெரியவில்லை. இது தொடர்பாக, தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் எதையும், தேர்தல் கமிஷன் வெளியிடவில்லை.
எனவே, அவர்கள் சந்தேகம் ஏற்பட்டால், பொருட்களை பறிமுதல் செய்து விட்டு, 'உயர் அலுவலரிடம் ஆவணத்தை காண்பித்து, பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்' என்கின்றனர்.
இதனால், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு பணம் எடுத்து செல்வோர், அலுவலகம், கடைகள், பெட்ரோல் பங்க் போன்றவற்றில் இருந்து, வங்கிக்கு பணம் செலுத்த செல்வோர், சிறு வணிகர்கள் என, அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
உரிய ஆவணங்கள் எது என்பதில் குழப்பம் ஏற்படுவதால், சோதனையில் ஈடுபடும் அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே, பல இடங்களில் வாக்குவாதம் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தேர்தல் கமிஷன் தீர்வு காண வேண்டும் என்பதே, அனைவருடைய கோரிக்கையாக உள்ளது.
அரசியல்வாதிகள் தேர்தலுக்கு முன்பே பணத்தை உரிய இடங்களுக்கு கொண்டு சென்று விட்டனர். எனவே, அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சாதாரண மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால், சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால்
மற்றும் பல்வேறு சங்கத் தலைவர்கள், நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசா சாஹுவை சந்தித்து, பறக்கும் படையினரால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி, உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.
இதேபோல் பல்வேறு தரப்பினரும் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:
தேர்தலில் அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஒருவர் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்ல அனுமதி கிடையாது. அதற்கு மேல் எடுத்து சென்றால், பறக்கும் படையினர் பறிமுதல் செய்வர்.
பணம் மற்றும் பரிசு பொருட்களுக்கு, உரிய ஆவணங்களை காண்பித்தால், அவற்றை திரும்ப ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தாலே பறிமுதல் செய்கின்றனர். பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. எனினும் பணப் பட்டுவாடாவை தடுக்க, சோதனை அவசியமாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
உரிய ஆவணங்கள் இருந்தும், நகைகளை பறக்கும் படையினர் பிடிப்பதால் சிக்கல் ஏற்படுகிறது. தேர்தலுக்கும் எங்கள் நகைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெளிவுப்படுத்தி இருக்கிறோம்.உரிய ஆவணங்கள் இருந்தாலும், பறக்கும் படையில் உள்ளோருக்கு தெளிவு இல்லாததால், வருமான வரி அதிகாரிகளிடம் நகைகளை ஒப்படைக்கின்றனர். அதை மீட்க ஒரு வாரமாகி விடுகிறது. பணம் 50,000 ரூபாய்க்கு மேல் எடுத்து செல்லக்கூடாது என்பதால், நகை வியாபாரம் 50 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு சவரன் நகை 50,000 ரூபாயாகி விட்டதால், அந்த நகையை கூட மக்களால் பணம் எடுத்து சென்று வாங்க முடியவில்லை.
எடுத்து செல்ல முடியல!' வீடு, மனை சொத்து பரிமாற்றத்துக்காக முத்திரைத் தாள்கள் வாங்க, பணம் எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. தமிழக வீடு, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது: வீடு, மனை சொத்து வாங்குவோர், 2-3 லட்சம் ரூபாய்க்கு முத்திரை தாள் வாங்க வேண்டியுள்ளது. இதற்காக பணம் எடுத்து சென்றாலும், பறக்கும் படை சோதனையில் உரிய ஆவணம் இல்லை என்று, பறிமுதல் செய்கின்றனர். இதனால், சொத்து பரிவர்த்தனையும் பாதிக்கப்படுகிறது. முத்திரை தாள் வாங்க, பணம் எடுத்து செல்லும்போது, என்ன ஆவணம் இருக்க வேண்டும் என்பதை, அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பறக்கும் படை என்ற பெயரில், தமிழகம் முழுதும் விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள், மருத்துவ செலவினங்கள், அத்தியாவசிய தேவைக்கு எடுத்து செல்லும் பணம் அதிகம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. முரண்பாடான நடத்தை விதிகளால், வணிகர்கள் தங்கள் வணிகத்தை தேர்தல் வரை தொடர்வது, மிகவும் சவாலானதாகவே இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், தேர்தல் தேதியான ஏப்., 19 வரை கடையடைப்பு போராட்டம் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.விக்கிரமராஜா, தலைவர்,தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு
வாசகர் கருத்து