யாருடைய வேட்புமனுக்கள் ஏற்பு... நிராகரிப்பு : அதகளப்படும் தேர்தல் களம்
தேனி தொகுதியில் டி.டி.வி.தினகரனின் வேட்புமனு உள்பட பல தொகுதிகளில் பிரதான கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம், விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி லோக்சபா தொகுதியில் அ.ம.மு.க., வேட்பாளராக டி.டி.வி.தினகரனும் தி.மு.க., சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும் அ.தி.மு.க., சார்பில் நாராயணசாமியும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், வேட்பாளர்களின் வேட்புமனுக்களை பரிசீலனை செய்வது தொடர்பான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. இதில், தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
அதேநேரம், அ.ம.மு.க., வேட்பாளர் டி.டி.வி.தினகரனின் வேட்புமனு தாக்கலில் பிரமாண பத்திரத்தின் நகல், ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
இதன் காரணமாக, தினகரனின் சொத்து விவரம், அவர் மீதான வழக்கு விவரம், கடன் நிலவரம் போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. 'தினகரனின் பிரமாண பத்திரத்தைப் படித்துப் பார்க்க அவகாசம் வேண்டும்' என தி.மு.க, அ.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதற்கு டி.டி.வி.தினகரன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் கூட்ட அரங்கில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், தினகரனின் பிரமாண பத்திரம் குறித்த இதர வேட்பாளர்களின் கோரிக்கையை அடுத்து, அவரது வேட்புமனு நிறுத்தி வைப்பதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். மதியம் 3 மணி வரையில் தினகரனின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், மத்திய சென்னை தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் வினோஜ் செல்வத்தின் வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு தி.மு.க., தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சேலம் தொகுதியில் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு 2 இடங்களில் ஓட்டு உள்ளது குறித்து விளக்கமளிக்கவும் தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவுறுத்தினார்.
ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. அவர் பெயரில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் உள்ள 5 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. நீலகிரியில் தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசாவின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
வடசென்னையில் அ.தி.மு.க., வேட்பாளர் ராயபுரம் மனோவின் வேட்புமனுவில் போதிய தகவல்கள் இல்லை எனக் கூறி வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தி.மு.க., வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் மனுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பிரமாண பத்திரத்தில் வழக்கு குறித்த போதிய தகவல்கள் இல்லை எனக் கூறி நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. அதையும் மீறி நயினாரின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து