கச்சத்தீவு மீண்டும் இந்தியாவிடம் வரவேண்டும்: அண்ணாமலை
"தமிழக பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு மீட்பது குறித்த அறிவிப்பு இடம் பெறும். தேர்தலுக்காக இந்த விவகாரத்தை நாங்கள் கையில் எடுக்கவில்லை. மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும்" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
கருணாநிதியிடம் அனுமதி பெற்று கச்சத்தீவு இலங்கைக்கு தரப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது. காங்கிரஸ் அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தருவதற்கு அனுமதி அளித்தபோது, 'சிறியதாக போராட்டம் செய்து சமாளித்து விடுகிறேன்' எனக் கருணாநிதி கூறியுள்ளார்.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததில் தி.மு.க.,வுக்கு முழுப்பங்கு உள்ளது. கருணாநிதி சம்மதம் தெரிவிக்காமல் இருந்திருந்தால் மத்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தந்து இருக்காது.
இதனால் இந்தியாவின் எல்லை சுருங்கி இருக்கிறது. இப்படியொரு துரோகத்தை செய்தது, காங்கிரசும் தி.மு.க.,வும் தான். ஆள் கடலில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் தி.மு.க., செய்த வேலை தான் காரணம்.
கடந்த சில வருடங்களாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக பா.ஜ., முன்வைத்து வருகிறது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் மனு அளித்தோம். கச்சத்தீவு மீண்டும் நம் நாட்டின் கைகளுக்கு வர வேண்டும்.
கச்சத்தீவை இலங்கைக்கு தரும் வேலையை செய்துவிட்டு, 45 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்ததுபோல தி.மு.க., காட்டி வருகிறது. இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கு என்ன வழிகள் இருக்கிறதோ அதை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
தமிழக பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு மீட்பது குறித்த அறிவிப்பு இடம் பெறும். தேர்தலுக்காக இந்த விவகாரத்தை நாங்கள் கையில் எடுக்கவில்லை. மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து