ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட மருத்துவமனை: வேட்பாளர் அறிமுகத்தில் சீமான் சர்ச்சை
''ஆக்கிரமிப்பு இடத்தில் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதாக, வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், சீமான் நகைச்சுவைக்காக பேசினார்,'' என மத்திய சென்னையில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் கார்த்திகேயன் கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம், பல்லாவரத்தில் இரு தினங்களுக்கு முன் நடந்தது. கூட்டத்தில் அனைத்து தொகுதி வேட்பாளரையும், அக்கட்சி தலைவர் சீமான் அறிமுகப்படுத்திப் பேசினார்.
அப்போது, மத்திய சென்னையில் போட்டியிடும் டாக்டர் கார்த்திகேயன் குறித்து பேசும்போது, 'மருத்துவர் தம்பி போட்டியிட மறுத்தார்; அவர் கட்டும் மருத்துவமனை ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ளது. ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இடத்துக்கு முன் அமர்ந்து போராடுவேன் என சொன்னேன். சீமான் சொன்னால் அதை கண்டிப்பாக செய்வார் என்பதால், பதற்றமான மருத்துவர் போட்டியிடுகிறேன் எனக் கூறி சம்மதித்தார். இப்படித்தான் மத்திய சென்னைக்கு மருத்துவர் வேட்பாளர் ஆனார்' என பேசினார்.
இந்த பேச்சுக்குப் பின், தேர்தலில் போட்டியிட்டால் ஆக்கிரமித்து கட்டப்பட்டது சட்டப்பூர்வமாகி விடுமா? என சீமானை நோக்கிக் கேள்விகள் எழுந்தன.
இதனால், இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பதை அறிய மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயனை சந்தித்தோம்.
அவர் கூறியதாவது:
சென்னை, மடிப்பாக்கம் அடுத்த புழுதிவாக்கத்தில், எனக்கு சொந்தமான இடத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறேன். அந்த மருத்துவமனையின் சீரமைப்பு பணி இரண்டு மாதங்களாக நடந்து வந்தன. அதனால், தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டினேன். வேட்பாளரானால், சீரமைப்பு பணி பாதிக்கும் என்பதற்காக மறுத்தேன். பின், என்னை சீமான் சம்மதிக்க வைத்தார். அப்படித்தான் வேட்பாளர் ஆக்கப்பட்டேன்.
மற்றபடி, என்னுடைய மருத்துவமனை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என, சீமான் பேசியது நகைச்சுவைக்காக மட்டும் தான். மருத்துவமனை அமைந்திருக்கும் இடம் என்னுடைய சொந்த இடம். மனைவி மற்றும் என்னுடைய பெயரில் உள்ளது. 100 சதவீதம் ஆக்கிரமிப்பு கிடையாது.
இவ்வாறு கார்த்திகேயன் கூறினார்.
வாசகர் கருத்து