பக்கெட் சின்னம் கேட்கும் பன்னீர்: தேர்தல் கமிஷனில் மனு

லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம், தனக்கு பக்கெட் சின்னத்தை வழங்க வேண்டும் என தேர்தல் கமிஷனில் மனு கொடுத்துள்ளார்.
பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். நேற்று ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், " என் பலத்தை நிரூபிப்பதற்காக தேர்தலில் போட்டியிடவில்லை. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அ.தி.மு.க.,வை 50 ஆண்டுகாலம் வழிநடத்தினர். அவர்கள் கடந்து வந்த பாதையில் செல்ல வேண்டும் என்பது தான் என்னுடைய குறிக்கோள். இந்த தேர்தலில் பக்கெட் வாளி, பலாப்பழம், திராட்சை ஆகிய சின்னங்களில் ஒன்றை ஒன்றை ஒதுக்குமாறு கேட்டுள்ளோம்" என்றார்.
இதையடுத்து, தேர்தல் கமிஷனில் ஓ.பி.எஸ்., சார்பாக இரண்டு மனுக்களை பெங்களூரு புகழேந்தி கொடுத்துள்ளார். ஒரு மனுவில், 'நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க., லோக்சபா தேர்தலில் இரட்டை இலையை எங்களுக்கு ஒதுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டு, நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை சுட்டிக் காட்டியுள்ளார்.
மற்றொரு மனுவில், 'இரட்டை இலை சின்னத்தை எங்கள் அணிக்கு ஒதுக்க வேண்டும். ஒருவேளை ஒதுக்காவிட்டால் பக்கெட் வாளி சின்னத்தை ஒதுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
பன்னீர்செல்வம் தரப்பின் மனுக்களை பரிசீலித்து தேர்தல் கமிஷன் சின்னத்தை ஒதுக்க உள்ளது.
வாசகர் கருத்து