மொபைலில் பேச பழனிசாமி தடை
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று முன்தினம் மாவட்ட, மாநகர நிர்வாகிகளுடன் தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் பேசியதாவது:
சேலம் தொகுதியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் எனக்கு மட்டுமின்றி உங்களுக்கும் உள்ளது.
நிர்வாகிகள் ஓட்டு சேகரிக்க ஆட்களை அழைத்துக் கொண்டு கூட்டமாக செல்லாமல், வீடுகள் தோறும் சென்று திண்ணை பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். தி.மு.க., அரசின் மின்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு உயர்வுகளை எடுத்துக்கூறி அவர்களின் ஓட்டுகளை பெற வேண்டும்.
குறிப்பாக, தி.மு.க., - பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், மொபைல் போனில் பேசி ஓட்டு சேகரிப்பு விபரம், கள நிலவரம், கட்சியில் உள்ள அதிருப்தியை விசாரிப்பர்.
நீங்களும் நட்பு ரீதியாக பேசும் நிலையில் அதை அவர்கள் பதிவு செய்து சர்ச்சை, குழப்பத்தை விளைவிப்பர். அவர்களின் அழைப்புகளை தவிர்த்துவிட வேண்டும். மீறி பேசினால், நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதுகுறித்து அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:
சில மாதங்களுக்கு முன் பன்னீர்செல்வம் அணியில் உள்ள கோலப்பன், அ.தி.மு.க.,வின் பொன்னையனிடம் மொபைலில் பேசி குழப்பத்தை ஏற்படுத்தினார்.
அதுபோன்று, அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேறி, தற்போது தி.மு.க.,வில் சேலம் தொகுதியில் போட்டியிடும் செல்வகணபதி, அ.தி.மு.க.,வினரிடம் மொபைல் போனில் பேசி குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அறிந்ததால், பழனிசாமி இவ்வாறு தடை விதித்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து