'நாங்கள் காப்பியடிக்கவில்லை' :மாஜி அமைச்சர் ரியாக்ஷன்
''திண்டுக்கல் தொகுதியில், இரட்டை சிலை சின்னத்தில் எஸ்.டி.பி.ஐ., கட்சி போட்டியிடுவதாக கூறியதால் தான் தொகுதியை கொடுத்தோம். அது போல் தேர்தல் அறிக்கையை நாங்கள் யாரை பார்த்தும் காப்பியடிக்க வேண்டிய அவசியமில்லை,'' என, நேற்று வெளியான 'தினமலர்' நாளிதழ் செய்திக்கு விளக்கம் கொடுத்து பேசினார், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன்.
திண்டுக்கல்லில் நடந்த எஸ்.டி.பி.ஐ., கட்சியின் வேட்பாளர் முபாரக் அறிமுகக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
'தினமலர்' நாளிதழில், திண்டுக்கல் தொகுதியை எஸ்.டி.பி.ஐ., கட்சிக்கு கொடுத்தது குறித்து முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், என் படங்களை பதிவிட்டு செய்தி வெளியிட்டுள்ளனர். அந்த செய்தியில் இடம் பெறாத விஷயங்களையும் இங்கு சொல்கிறேன்.
கூட்டணி சார்பில் போட்டியிட எஸ்.டி.பி.ஐ., கட்சி திண்டுக்கல் தொகுதியை கேட்கிறது என பொதுச்செயலர் பழனிசாமி எங்களிடம் தெரிவித்தார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால், தொகுதியை விட்டுக் கொடுக்கலாம் என கூறினேன். அதை பொதுச்செயலரும், அக்கட்சியினரும் ஏற்றுக் கொண்டனர். அதன்பின் தான் தொகுதி ஒதுக்கப்பட்டது. அக்கட்சியினர் ஒப்புக்கொள்ளவில்லை எனில், என் மகனையோ அல்லது எங்களில் ஒருவரையோ களத்தில் நிறுத்தியிருப்போம்.
'தினமலர்' தேர்தல் களத்தில் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை குறித்து, 'ஈயடிச்சான் காப்பி' என பதிவிட்டுள்ளனர். நாங்கள் யாரை பார்த்தும் காப்பியடிக்க வேண்டிய அவசியம் இல்லை. 234 தொகுதிகளிலும் உள்ள நிர்வாகிகளிடம் பேசி, கள நிலவரத்தை அறிந்து, பல நாட்களாக தயாரித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அவர் பேசிய 25 நிமிடத்தில், 15 நிமிடம் 'தினமலர்' நாளிதழ் செய்தி குறித்தே பேசினார்.
வாசகர் கருத்து