Advertisement

டி.வி., ரிமோட் இன்னும் என் கையில் தான் இருக்கிறது: கமல்ஹாசன்

"சாதியை கற்றுத் தரும் ஒரு கட்சியோ, திட்டமோ வந்தால் அதை தகர்க்க வேண்டியது என் கடமை. எதிரி யார் என்பதை முடிவு செய்துவிட்டால், வெற்றி நிச்சயம்" என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை 2018ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் துவக்கினார். 'திராவிட அரசியலுக்கு மாற்று' என்ற முழக்கத்துடன் ம.நீ.ம., செயல்பட்டு வந்தது.

2019 லோக்சபா தேர்தலின்போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அன்றைய முதல்வர் பழனிசாமி, பா.ஜ., தலைவர்கள் பேசும் காட்சி தொலைக்காட்சியில் ஓடும்போது, ரிமோட்டை எடுத்து கமல் வீசுவது போன்ற விளம்பர காட்சியை ம.நீ.ம., வெளியிட்டது.

"குடும்ப அரசியல் என்ற பெயரில் நாட்டையே குழிதோண்டிப் புதைத்தவர்களுக்கா உங்கள் ஓட்டு?" என்றெல்லாம் கமல் வசனம் பேசிய காட்சிகள், புதிய தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இதனால், சில தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை ம.நீ.ம., வேட்பாளர்கள் பெற்றனர். அடுத்து வந்த சட்டசபை தேர்தலில் 154 தொகுதிகளில் போட்டியிட்ட ம.நீ.ம., ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. கோவை தெற்குத் தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் கமல் தோற்றார்.

இந்நிலையில், 2024 லோக்சபா தேர்தலில் தி.மு.க.,-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக கமல் தெரிவித்தார். அவர், 'கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடலாம்' எனப் பேசப்பட்டு வந்த நிலையில், 2025ம் ஆண்டு காலியாக உள்ள ராஜ்யசபா சீட்டை அவருக்கு ஒதுக்குவதாக ஸ்டாலின் அறிவித்தார்.

கமலின் இந்த முடிவு, ம.நீ.ம., நிர்வாகிகளுக்குள் இருவேறுபட்ட கருத்துகளை உருவாக்கியது. இந்நிலையில், தன் நிலைப்பாடு குறித்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று நடந்த தேர்தல் பிரசார வழிகாட்டுதல் கூட்டத்தில் கமல் விளக்கினார்.

கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:

நமக்கு அந்நியமான ஓர் அரசியலை புகுத்த நினைக்கிறார்கள். நான் காந்தியின் கொள்ளுப்பேரன். நாம் அனைவரும் காந்தியின் கொள்ளுப் பேரப்பிள்ளைகள் தான். இதற்கு முன் காந்தியின் சாம்பலை தெருவில் போட்டு உடைத்தனர்.

அவர்களுக்கு என் பதில் ஒன்று தான். 'கோட்சேவின் சாம்பலும் ஓர் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதைக் காப்பதும் என்னுடைய கடமை' என்றேன். நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மீறக் கூடாது.

அரசியல் களத்துக்கு நான் வருவதற்கு முன்பு வெளியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என் தகப்பனார் காங்கிரசில் இருந்தார். சுதந்திரம் கிடைத்த பிறகும் அவர் காங்கிரசில் இருந்தார். அவர் கொஞ்சம் முண்டியடித்து இருந்தால் அமைச்சராக இருந்திருப்பார்.

தன் வேலை முடிந்துவிட்டது என அமைதியாக இருந்தார். கடைசி வரையில் அவர் கதர்ச் சட்டை தான் போட்டுக் கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக வந்த எனக்கு சந்தர்ப்பவாதம் என்பது ஒரு வாதமே இல்லை. சந்தர்ப்பவாதத்தை நமக்கு ஏற்றவாறு மாற்ற முடியாது.

நான் தூக்கி அடித்த ரிமோட், இன்னும் என் கையில் தான் இருக்கிறது. டி.வி.,யும் அங்கே தான் இருக்கிறது. இது நம் வீட்டு ரிமோட்.. நம் வீட்டு டி.வி. ஆனால், டி.வி.,யின் கரண்ட், பேட்டரியை உருவாக்கும் சக்தி மத்தியில் உருவாகிக்கொண்டிருக்கிறது. இனி ரிமோட்டை வீசுவது போன்ற செய்கைகளுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

தேசத்தின் பிரதமராக மோடியை நேரில் பார்த்தால் அவருக்கு வணக்கம் செலுத்துவேன். அவரை எதிர்த்துப் பேசிவிட்டு குனிவது சரியா எனக் கேட்கலாம். தன்மானத்தை விட்டு ஒருபோதும் தலைவணங்க மாட்டேன்.

பல் முளைக்காத காலத்தில் இருந்து, சாதிகள் இல்லை என சொல்லி வளர்க்கப்பட்ட குழந்தைகள் நாங்கள். மறுபடியும் சாதியை கற்றுத் தரும் ஒரு கட்சியோ, திட்டமோ வந்தால் அதை தகர்க்க வேண்டியது என் கடமை. எதிரி யார் என்பதை முடிவு செய்துவிட்டால், வெற்றி நிச்சயம். நான் என்னுடைய எதிரி யார் என்பதை முடிவு செய்துவிட்டேன்.

எனக்கு நினைவு போகும் வரையில் என் எதிரி சாதியம் தான். சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பது குறித்து கேட்டார்கள். அப்படியொரு கணக்கெடுப்பு அவசியம். அப்போது தான் யாரெல்லாம் கீழே இருக்கிறார்கள் எனத் தெரியும். அவர்களுக்காக போராட வேண்டும். இதை முதலில் கண்டுபிடித்தது காந்தி தான். ஓட்டுக்காக அவர் செய்தார் என்றால் என்றைக்கு அவர் தேர்தலில் நின்றார்?

நாட்டில் ஜனநாயகபூர்வமான அரசியல் இருக்க வேண்டும். காந்தி இறந்தது, முஸ்லிம்களின் நலனுக்காக அல்ல. மதச்சார்பற்ற இந்தியாவுக்காக அவர் இறந்தார். என் கட்சியின் நிலைமை எப்படி இருக்கிறது என ஓர் ஊடகத்தில் வெளியிட்டார்கள். இங்கு கூடியிருக்கும் புகைப்படத்தையும் எடுத்துப் போடுங்கள்.

அனைவர் வீட்டிலும் பழைய பொருள்கள் இருக்கும். போகி வரும்போது அவையெல்லாம் என்ன ஆகும் என்று பாருங்கள். என்னுடைய முடிவால் உங்களுக்கு மனவருத்தங்கள் இருக்கலாம். கட்சியைவிட்டு போனவர்கள் போகட்டும் என விடமாட்டேன். ஆனால், அவர்கள் திரும்பி வர வேண்டும்.

இது வேண்டுகோள் அல்ல, வழிகாட்டல். எங்கு இருந்தாலும் என்னுடைய சித்தாந்தம் புரியும்போது வருவீர்கள். சாதி தான் நம்முடைய எதிரி. நான் எடுத்த முடிவை தியாகம் என்று கூறுவதைவிட, வியூகம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நான் எந்த ஏரியாவில் போட்டியிடப் போகிறேன் எனப் பயந்து கொண்டிருந்தார்களோ, அவர்களுக்காக நான் பிரசாரத்துக்கு போகப் போகிறேன். அது எனக்குக் கிடைக்கும் மரியாதை அல்ல, நமக்கு கிடைக்கும் மரியாதை.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்