சத்தமாக பாடல்கள் ஒலிபரப்ப தடை: முதல்வர் நுாதன வாக்குறுதி
கோவா என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது, அழகிய கடற்கரை, சுற்றுலாவுக்கு மிகவும் உகந்த இடம், கும்மாளமிட்டு கொண்டாடுவதற்கு பாதுகாப்பான இடம் என்பது தான். சுற்றுலாவை முதன்மையாகக் கொண்டுள்ள இந்த மாநிலத்தில் உள்ள மக்களின் மிகப்பெரும் பிரச்னையே, இந்த சுற்றுலா தான்.
இங்குள்ள இரண்டு லோக்சபா தொகுதிகளுக்கு, மூன்றாம் கட்டமான மே 7ல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான உடன், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் பிரமோத் சாவந்த், மிகப் பெரும் வாக்குறுதியை மக்களுக்கு அளித்துள்ளார்.
கடற்கரை பகுதிகளில், குறிப்பாக வடக்கு கோவாவில் உள்ள சுற்றுலா விடுதிகள், இரவு விடுதிகள், ஹோட்டல்கள், திறந்த நிலை மைதானங்கள் போன்ற பகுதிகளில், அதிக சத்தத்துடன் நடக்கும் கொண்டாட்டங்கள் மீது போலீஸ் நடவடிக்கை பாயும் என்பது தான் அந்த அறிவிப்பு.
அவருடைய இந்த அறிவிப்பு, கோவாவில் பெரும்பாலான பகுதி மக்களுக்கு சிரிப்பை தான் வரவழைத்துள்ளது. தேர்தலுக்கான மாயாஜால அறிவிப்பு என்று அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.
சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற கோவா, கடந்த பல ஆண்டுகளாக போதை கொண்டாட்டங்களுக்கான தலைநகராக மாறி வருகிறது. குடித்து கும்மாளமிடுவது ஒரு பக்கம் என்றால், போதைப் பொருள் பார்ட்டிகள் நடப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. இது, கோவாவின் அஞ்சுனா வாகடாரில் பெரிய அளவில் நடக்கிறது.
இதற்காக வரும் சுற்றுலா பயணியரை கவர்வதற்காக, சுற்றுலா விடுதிகள் உள்ளிட்டவை போதையை அதிகரிக்க வைக்கவும், ஆடிப் பாடி கொண்டாடுவதற்காகவும், அதிக ஒலியுடன் பாடல்களை ஒலிபரப்புகின்றன.
புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது கோவா திக்குமுக்காடும். எங்கு பார்த்தாலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். தற்போது அது தினசரி நிகழ்வாகி வருகிறது.
ஆனால், இதுதான் உள்ளூர் மக்களுக்கு பெரும் இடைஞ்சலாக உள்ளது. சுற்றுலா பயணியருக்கு ஒரு நாள் கொண்டாட்டம், தங்களுடைய தினசரி திண்டாட்டமாக மாறியுள்ளதாக உள்ளூர்வாசிகள் புலம்புகின்றனர்.
போலீசில் புகார் அளித்தும், எந்தப் பலனும் ஏற்படவில்லை. நீதிமன்றங்கள் தலையிட்டு உத்தரவு பிறப்பித்தும், நிலைமை மாறவில்லை.
அதே நேரத்தில் சில உள்ளூர்வாசிகள், சுற்றுலா பயணியர் வருவதால் தங்களுக்கு வியாபாரம் நடப்பதாக கூறுகின்றனர். இரவு விடுதிகள், போதை விடுதிகளை நடத்தும் பெரும்பாலானோர் உள்ளூர்வாசிகளே. அதனால், அரசால் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை; எடுக்காமலும் இருக்க முடியவில்லை.
இந்த நிலையில் தான், முதல்வரின் அறிவிப்பை, தேர்தலுக்கான நாடகமாக உள்ளூர் மக்கள் பார்க்கின்றனர்.
வாசகர் கருத்து