பா.ஜ.,வுக்கு சாதகமான காங்கிரஸ் முடிவு!
அவங்கவங்க எடுக்கும் முடிவுகள் நமக்கு சாதகமாக இருக்கு என்பது, ஹிமாச்சல பிரதேசத்தில் உறுதியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள நான்கு லோக்சபா தொகுதிகளுக்கு, கடைசி கட்டமான, ஜூன் 1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது.
பெரும் பிரச்னை
கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களில், நான்கு தொகுதிகளையும் பா.ஜ.,வே வென்றுள்ளது.
கடந்த 2021ல் மண்டி தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்., மாநில தலைவரும், முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவியுமான பிரதிபா சிங் வென்றார்.
இங்குள்ள ஷிம்லா மற்றும் காங்க்ரா தொகுதிகளுக்கு இடையே உள்ள வேற்றுமை, பாகுபாடு பெரும் பிரச்னையாக உருவாகியுள்ளது.
இந்த இரண்டு தொகுதிகளிலும், தலா, 17 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
அமைச்சர்கள் தேர்வு உள்ளிட்டவற்றில், ஷிம்லாவுக்கு காட்டப்படும் முக்கியத்துவம், காங்க்ராவுக்கு காட்டப்படுவதில்லை என்ற ஆதங்கம் உள்ளது.
தற்போதைய காங்கிரஸ் அரசில், ஷிம்லா லோக்சபா தொகுதிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த, ஐந்து பேர் மாநில அமைச்சர்களாக உள்ளனர். ஒரு துணை சபாநாயகர், மூன்று செயலர்கள் உள்ளனர்.
அதே நேரத்தில் காங்க்ராவில், இரண்டு அமைச்சர்கள், சபாநாயகர் மற்றும் இரண்டு செயலர்கள் மட்டுமே உள்ளனர். இந்த பாகுபாடு தற்போது எரிமலையாகி வருகிறது. இது பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது. ஹிந்துக்கள் அதிகம் என்பதால் ராமர் கோவில் உள்ளிட்ட பா.ஜ.,வின் நடவடிக்கைகள் அவர்களை ஈர்த்துள்ளன.
ராஜினாமா
சமீபத்தில் ராஜ்யசபா தேர்தலின்போது, ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ., வேட்பாளருக்கு ஓட்டளித்தனர். பெரும்பான்மை இருந்தும், காங்., வேட்பாளர் தோல்வி யடைந்தார்.
இந்த ஆறு பேரில் ஒருவரான சுதிர் சர்மாவை, காங்க்ரா தொகுதியில் நிறுத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங், மாநில அமைச்சராக உள்ளார். சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்த அவர், உடனே அதை திரும்பப் பெற்றார்.
கோஷ்டி மோதல் காங்கிரசில் தீவிரமாக உள்ளது. இதனால், இந்த முறையும், நான்கு தொகுதிகளும் நமக்கே என்ற நம்பிக்கையில் பா.ஜ., உள்ளது.
வாசகர் கருத்து