அழுத்தம் கொடுத்த பா.ஜ., தலைமை: தர்மபுரியில் வேட்பாளரான சவுமியா
தர்மபுரி தொகுதி, பா.ம.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், 6 மணி நேரத்தில் மாற்றப்பட்டார். இதற்கு, பா.ஜ., தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட நெருக்கடியே காரணம் எனக் கூறப்படுகிறது.
வரும் லோக்சபா தேர்தலுக்கு, தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணியில், பிரதான கட்சியாக பா.ம.க., இடம் பெற்றுள்ளது. கூட்டணியை கட்டமைத்திருக்கும் பா.ஜ., தரப்பில் இருந்து கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கட்சித் தலைவர்களிடமும் நிபந்தனை ஒன்று வைக்கப்பட்டது.
இந்த முறை தமிழகத்தில் பா.ஜ., தரப்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் ஏற்கனவே மக்களுக்கு நன்கு அறிமுகமான தலைவர்கள். குறுகிய கால இடைவெளியில் தேர்தல் நடக்க இருப்பதால், புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க முடியாது என்பதாலேயே இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதேபோல, கூட்டணியில் இடம்பெறும் மற்றக் கட்சிகளும், தலைவர்களைத் தான் போட்டியிட வைக்க வேண்டும். முடியாத பட்சத்தில் தலைவருக்கு நெருக்கமான பிரபலம் போட்டியிட வேண்டும் என, நிபந்தனையில் சொல்லப்பட்டது.
இதன் அடிப்படையில், பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், தேவநாதன் என, பல தலைவர்கள் போட்டியிட வைக்கப்பட்டதோடு, பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் களம் இறக்கி விடப்பட்டார்.
இந்த நிலையில், பா.ம.க., தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் தர்ம புரிக்கு அன்புமணி பெயர் இல்லை என்றதும், அவரை நிற்கச் சொல்லி பா.ஜ., தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்தனர். ஏற்கனவே 'ராஜ்யசபா எம்.பி.,யாக இருப்பதால், தான் போட்டியிட வாய்ப்பில்லை' என்று அன்புமணி சொல்ல, அதை ஏற்றுக் கொண்ட பா.ஜ., தரப்பினர், 'உங்களால் முடியாது என்றால், பிரபலமான வேறு ஒருவரை வேட்பாளராக அறிவியுங்கள்' என சொல்லி உள்ளனர்.
இதையடுத்து, ஏற்கனவே தர்மபுரி தொகுதியில் பசுமைத் தாயகம் வாயிலாக பல்வேறு சமூகப் பணிகளை செய்து, மக்கள் மத்தியில் அறிமுகம் இருக்கும் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே பா.ம.க., தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அரசாங்கம் விலக்கிக் கொள்ளப்பட்டார்.
அன்புமணி தர்மபுரியில் முன்பு போட்டியிட்ட போது, அவருக்காக தொகுதியில் மாதக் கணக்கில் தங்கியிருந்து சவுமியா தேர்தல் வேலை பார்த்திருக்கிறார். அதனால், கட்சியினர் மத்தியில் அவருக்கு நல்ல அறிமுகம் உள்ளது.
இது குறித்து, பா.ம.க., தரப்பில் கூறியதாவது:
தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் வரும் லோக்சபா தேர்தலுக்கு வலுவான கூட்டணி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்று லோக்சபாவுக்கு வர வேண்டும் என்பதே, பிரதமர் மோடி உள்ளிட்ட டில்லி தலைவர்களின் விருப்பம்.
அதற்காகவே பிரபலமானவர்களை போட்டியிட வைக்க திட்டமிடப்பட்டது. கூட்டணி கட்சி தலைவர்களிடமும் அதுவே வலியுறுத்தப்பட்டது. அனைவரும் ஏற்றுக் கொண்டனர். பா.ம.க., தரப்பில் அன்புமணி, ராஜ்யசபா உறுப்பினர் பதவியை காட்டி தயங்கினார். அதன்பின்பே, அவருடைய மனைவி சவுமியா களமிறக்கப்பட்டார். அவருக்கு தொகுதியில் நல்ல செல்வாக்கு இருக்கிறது.
த.மா.கா.,வுக்கு அதே பிரச்னை இருந்தது. ஆனால், ஜி.கே.வாசன் போட்டியிட விரும்பாததால், ஒதுக்கிய தொகுதிகளுக்கு கட்சியினர் போட்டியிடுகின்றனர். பா.ஜ.,வின் இந்த பார்முலா வெற்றியடையும்.
இவ்வாறு அத்தரப்பில் கூறினர்.
வாசகர் கருத்து