பெண்கள் ஓட்டுகளை கவர குழு அமைத்தது தி.மு.க.,
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் செயல்வீரர்கள் கூட்டம், குன்றத்துார் அருகே பரணிபுத்துாரில் நேற்று முன்தினம் நடந்தது.
கூட்டத்தில் சிறு, குறு தொழில் துறை அமைச்சரும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலருமான அன்பரசன் பங்கேற்று, கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார்.
இல்லத்தரசிகள் ஓட்டுகளை கவரவும், இளைய தலைமுறை ஓட்டுகளை கவரவும் தனித்தனியாக 10 பேர் குழுவினர் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பேசினார்.
கூட்டத்தில் பங்கேற்றோர் கூறியதாவது:
பெண்கள், இளைஞர்கள் ஓட்டுகளை கவர, பூத் வாரியாக, 10 பேர் அடங்கிய பெண்கள் குழு, 10 பேர் அடங்கிய இளைஞர் குழு நியமிக்கப்பட்டு உள்ளன.
பெண்கள் குழு, ஒவ்வொரு வீடாக சென்று இல்லத்தரசிகளிடம் பேசி ஓட்டு சேகரிக்கும். தி.மு.க., ஆட்சியின் மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம், கல்லுாரி மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் உள்ளிட்ட பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களை எடுத்துரைக்க அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக, தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்ட காஸ் சிலிண்டர் விலை குறைப்பை சுட்டிக்காட்ட சொல்லியுள்ளனர்.
அதேபோல், முதல் வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றாக கூடும் விளையாட்டு மைதானம், டீக்கடை, தெருவில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர்களிடம் பேச்சு நடத்தும் 10 பேர் குழுவினர், தி.மு.க., செய்துள்ள திட்டங்களைபட்டியலிட சொல்லியுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து