தி.மு.க.,வின் அரைத்த மாவு அறிக்கை

தி.மு.க.,வின் 64 பக்க தேர்தல் அறிக்கையில் 224 வாக்குறுதிகள்! கேட்பதற்கு மிக பிரமாண்டமாக இருக்கிறது அல்லவா? தி.மு.க., தொண்டர்கள் கண்டிப்பாக கொண்டாடுவர். தேர்தல் அறிக்கையில் தெரியவருவது இவை தான்:

1 மாநில கட்சியால் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை என்று அப்பட்டமாக தெரிகிறது. தேசிய பார்வை ஏதும் இல்லை. வழக்கமான மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வகையறா இருக்கிறது. மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் எல்லாம் வரவேற்கத்தக்கது தான். இரண்டு பெரிய திராவிட கட்சிகள் தவிர்த்து வேறு ஒரு கட்சி சொன்னால் நம்பும்படியாக இருக்கும். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக மாநிலத்தில் ஆட்சி செய்துவிட்டு சில பத்தாண்டுகளாக மத்திய ஆட்சியில் பங்கு வகித்துவிட்டு ஏதோ இந்த 10 ஆண்டு பா.ஜ., ஆட்சியில் தான் மாநில உரிமை பறிபோனது போல பேசுவுது நம்பும்படியாக இல்லை.

கல்வியில் மாநில அதிகாரம் பற்றி தி.மு.க., அடிக்கடி பேசுகிறது. அறிக்கையிலும் குறிப்பிடுகிறது. ஆனால், கல்வி, மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது 1972ல்!

தேர்தல் பிரசாரமாக, பா.ஜ., உலகில் மூன்றாம் பெரிய பொருளாதாரமாக நம் நாட்டை ஆக்குவது பற்றி பேசி வருகிறது. அதோடு ஒப்பிடுகையில், இதில் மாநில கட்சியின் பார்வை தான் தெரிகிறது.

2 பா.ஜ., மீது அபரிமிதமான வெறுப்பு தெரிகிறது. ஒரு வாக்குறுதியில், 'கடந்த 10 ஆண்டு கால பா.ஜ., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்து சட்டங்களும் மறுபரிசீலனை செய்யப்படும்' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இப்படி ஏராளமான வாக்குறுதிகள் கடந்த 10 ஆண்டு மாற்றங்களை பழைய நிலைக்கு எடுத்துச்செல்வது பற்றி தான் இருக்கின்றன. அது தவிர, பா.ஜ.,வை விமர்சிப்பதுக்கென்று 64 பக்க அறிக்கையில் ஏழரை பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க.,வை ஒரு பக்கத்தில் கூட விமர்சிக்கவில்லை.

3 கச்சத்தீவு மீட்பு, திருக்குறள் பரப்பல் உள்ளிட்ட சாகா வரம் பெற்ற பல தி.மு.க., வாக்குறுதிகள் இதிலும் இடம் பெற்றுள்ளன. அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், 2024லிலும் கூட தி.மு.க.,வால் இவ்வளவு தான் யோசிக்க முடியுமா என, வாசகரை சிந்திக்க வைக்கிறது. எப்படியும் பல முறை இந்த வாக்குறுதிகளை கொடுத்தாகிவிட்டது, மத்திய-, மாநில ஆட்சிகளிலும் இருந்தாகிவிட்டது. இதையெல்லாம் செய்ய முடியவில்லை என்று ஒப்புக்கொண்டு வாக்குறுதி கொடுப்பதையாவது நிறுத்திக்கொண்டால் ஓரளவிற்கு நேர்மை இருப்பதாக மக்கள் பாராட்டுவர். இது பற்றி, இன்னும் விரிவாக, இந்த இணைப்பில் இடம்பெற்றுள்ள புளித்த மாவு கட்டுரையை படியுங்கள்.

4 சமூகத்தில் நிலவும் தேவைகளுக்கும் பிரச்னைகளுக்கும் தீர்வாக பல வாக்குறுதிகளை கொடுத்துள்ளனர். ஆனால், அவை அனைத்தும் நல வாரியம் அமைத்தல், வட்டியில்லா கடன் வழங்கல், மானியம் கொடுத்தல், அரசு ஆலை அமைத்தல், இலவசம் வழங்கல் என பழைய நேரு காலத்து தீர்வு வட்டத்திற்குள்ளேயே அடங்கி உள்ளன. அதாவது ஒரு பிரச்னை இருந்தால் மேற்கண்ட ஐந்து தீர்வுகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அரசு செலவு செய்ய வேண்டும்.

5 எப்படியும் இந்த பரிட்சையில பாஸ் ஆக மாட்டோம், விடை தாளில் சும்மா இரண்டு கவிதை எழுதி வைப்போமே என எழுதும் மாணவர் போல், பெட்ரோல் 75 ரூபாய், டீசல் 65 ரூபாய், காஸ் சிலிண்டர் 500 ரூபாய் என அள்ளிவிட்டு இருக்கிறது தி.மு.க. மேலும், மாநிலம் முழுவதும் இலவச வை-பை இன்டர்நெட், மாணவர்களுக்கு ஒரு ஜிபி டேட்டாவுடன் சிம் கார்டு என, பல கேளிக்கையான வாக்குறுதிகளும் உள்ளன.

6 அறிக்கை எழுதுபவர் ஒரு கட்டத்திற்கு மேல் அயர்ந்துவிட்டார் என தோன்றுகிறது. அனேகமாக இத்தனை பக்கங்கள் நிரப்ப வேண்டும் என, கனிமொழி அவருக்கு இலக்கு கொடுத்தாரோ என்னவோ. அயர்ச்சியில் அவர், மாநிலங்கள் கட்டுப்பாட்டில் படிப்படியாக ரயில்வே துறை கொண்டுவரப்படும் போன்ற நடக்கவே நடக்காது என்று வெளிப்படையாக தெரியும் விஷயங்களையும் வாக்குறுதியாக எழுதி உள்ளார். பஸ் விடுவதற்கே சிரமப்படும் தமிழக அரசு ரயில்விடும் என்றால் யாராவது நம்புவார்களா?

7 மாநில அரசாலேயே தீர்க்கக்கூடிய பிரச்னைகள் பற்றி தான் பெரும்பாலான வாக்குறுதிகள் உள்ளன. உள்ளூரில் ரோடு போடுவது இத்யாதி. இதெல்லாம் எப்படி தேசிய தேர்தலுக்கு பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை. ஒரு வேளை இந்த பிரச்னைகள் எல்லாம் இருக்கு ஆனால் மாநில அரசுக்கு அவற்றை தீர்க்க திராணி இல்லை என்று தெரியாமல் ஒப்புக்கொள்கிறார்களோ? இல்லை கனிமொழி மாநில அரசில் இடம்பெறவில்லை என்பதால் இப்படி ஒரு வெடி வைத்துவிட்டாரோ?

ரிப்பீட்டு ரிப்பீட்டு



நாட்டிலேயே தங்கள் கட்சிதான் முதன் முதலில் தேர்தல் அறிக்கையுடன் தேர்தலை சந்தித்த கட்சி என தி.மு.க., பெருமை கொள்கிறது. ஆனால் கருணாநிதி காலம் முதல், இன்று வரை பல வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் தேர்தல் அறிக்கைகளில் வலியுறுத்தி வருகிறது அக்கட்சி.

இந்தப் பக்கத்தில், தி.மு.க.,வின் 2021ம் ஆண்டு மற்றும் தற்போதைய தேர்தல் அறிக்கைகளை மட்டும் ஒப்பிட்டுள்ளோம்.

இதை வாசிக்கும்போது, இதுவரை 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சி, 15 ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., உடன் கூட்டணியில் இருந்த கட்சி, ஏன் தன் ஆட்சிக் காலத்தில் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை? நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கவில்லை? மத்திய அரசு நிறைவேற்றாவிடில் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை? என பல கேள்விகள் தோன்றுகின்றன.


இலங்கை தமிழர்கள்
2021

இலங்கையிலிருந்து இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சம் அடைந்த தமிழர்கள் மற்றும் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 1964-ம் ஆண்டில் ஏற்பட்ட சாஸ்திரி --- சிறீமாவோ பண்டார நாயகா இந்திய- - இலங்கை ஒப்பந்த அடிப்படையில் நாடு திரும்பியவர்களாகப் பெற்றுக் கொள்ளப்பட வேண்டிய- இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர்களும், அவர்களது குழந்தைகளும் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கும், ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகள் முகாம்களில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் உறவுகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கும் மத்திய அரசைக் கழக அரசு வலியுறுத்துவதுடன், அவர்களில் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விரும்புபவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்யும்.

2024

இந்தியாவில் வாழும் ஈழத் தமிழர்கள் குடியுரிமை பெற வழிவகுக்கப்படும்
.


கல்வி கடன்

2021


வங்கிகளில் கல்வி கடன் பெற்ற மாணவர்கள், ஓராண்டு காலத்துக்குள் கடனை செலுத்த இயலாவிட்டால், 30 வயதுகுட்பட்ட இளைஞர்களின் கல்விக் கடனை, அரசே ஏற்கும்.

2024

மாணவர்களின் கல்வி கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்.


கல்வி கொள்கை

2021


பொது பட்டியலில் உள்ள கல்வித் துறையை, மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற முயற்சிப்போம்.

2024

இந்தியாவில் எமர்ஜென்ஸி காலகட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரம் மாநில பட்டியலில் இருந்து, பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டன. அவை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றம் செய்யப்படும்.


நீட்

2021


முதல் சட்டசபை கூட்டத்திலேயே 'நீட்' தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலைப் பெற முயற்சிப்போம்.

2024

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.


விவசாய கடன் தள்ளுபடி

2021


சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க் கடன்கள் மற்றும் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின், 2019ல் நடைபெற்ற தேர்தல் நேரத்திலேயே ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது, அ.தி.மு.க., அரசு தேர்தல் லாபத்திற்காக அவசர கதியில் எவ்வித முன்னேற்பாடும் போதிய நிதி ஒதுக்கீடுகளும் இல்லாமல் இது தொடர்பாக அறிவித்துள்ளது. எனவே, தி.மு.க., இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்தபடி சிறு குறு விவசாயிகளின் கடன்கள் முறையாக நிதி ஒதுக்கி முழுவதுமாகத் தள்ளுபடி செய்யப்படும்.

2024

இந்தியா முழுதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கிகளில் பெற்றிருக்கும் கடனும் வட்டியும் ஒன்றிய அரசால் தள்ளுபடி செய்யப்படும்.


உரிமைத் தொகை

2021

தமிழ்நாட்டில் உள்ள குடும்ப தலைவியர் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவோம்.

2024

அனைத்து மாநில மகளிருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும்.


கான்கிரீட் சாலை

2021

திருவண்ணாமலையில் கிரிவலப் பாதை கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தப்படும். திருவண்ணாமலை தேரோடும் வீதி முழுவதும் சிமென்ட் கான்கிரீட் சாலையாக மாற்றப்படும்.

2024

தொழில் மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள சாலைகள்


மற்றும் இணைப்பு சாலைகள் கான்கிரீட் சாலைகளாக விரிவுபடுத்தப்பட்டு, போக்குவரத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்.


தமிழ் இருக்கை

2021

உலகெங்கிலும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்க படிப்படியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

2024

இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்தப்படும்.

கச்சத்தீவு

2021


கச்சத்தீவின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்று 1974ம் ஆண்டிலிருந்து தி.மு.கழகம் இந்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 1974ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த மீன் பிடிப்பதற்கும், மீன் வலைகள் உலர்த்துவதற்கும், தேவாலயங்களில் வழிபாடு நடத்துவதற்கும் இருந்த உரிமைகள் தொடர்பான பிரிவுகள், 1976ம் ஆண்டு அவசரநிலை காலத்தில் பறிக்கப்பட்டன. இதன் காரணமாக அடிக்கடி கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் தாக்கப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதும் தொடர் நிகழ்வுகளாக அதிகரித்து வருவதால் தமிழக மீனவர்களைப் பாதுகாத்திட, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

2024

கச்சத்தீவில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைந்திருப்பதால், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் மீனவர்களின் நலன் காக்கப்படவும், கச்சத்தீவை மீட்க வழிவகை செய்யப்படும்.

33 சதவீத இடஒதுக்கீடு

2021

சட்டசபைகளிலும் பார்லிமென்டிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டும் நிறைவேற்றப்படாத நிலையில் உள்ளது. இந்த சட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என தி.மு.க., மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தும்.

2024

சட்டசபைகளிலும் பார்லிமென்டிலும் 33 % மகளிர் இட ஒதுக்கீடு உடனடியாக செயல்படுத்தப்படும்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்