Advertisement

முதல்வரிடமும் ஒப்பம் பெறுங்க: டி.ஜி.பி.,யை அதிரவைத்த 110

குற்ற வழக்குகளில் பதிவாகியுள்ள ரவுடிகளை தேர்தல் போன்ற சிறப்பு நிகழ்வுகளின்போது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், 110ன் கீழ், வருவாய் கோட்டாட்சியர் சம்மன் அனுப்பி வரவழைத்து, சுய நன்னடத்தைக்கான சான்று பெறுவது வாடிக்கை. அந்த சான்றுக்கு இருவர் சாட்சி கையெழுத்திட வேண்டும் என்பதும் விதி. ஓராண்டுக்கு இந்த சான்று உயிர்ப்புடன் இருக்கும்.

சுய நன்னடத்தைக்கான ஒப்பம் அளிக்கும் நபர், உறுதிமொழி அளிப்பதை மீறி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு, எப்.ஐ.ஆர்., பதிவானால், உறுதிமொழி அளிக்கப்பட்ட காலத்தில் இருந்து குற்றம் பதிவு செய்யப்பட்ட காலத்தை ஓராண்டில் கழித்து, மீதமிருக்கும் காலத்தை தண்டனையாக அனுபவிக்க வேண்டும்.

லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால், தமிழகம் முழுதும் 110 விதியின் கீழ் குற்றப்பதிவுள்ள ரவுடிகளை பிடித்து, சுய நன்னடத்தை ஒப்பம் பெற உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, போலீசார் அதற்கான பணிகளில் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.

தமிழகம் முழுதும் லட்சக்கணக்கானோரிடம் இந்த ஒப்பம் பெறப்பட்டிருக்கிறது. இதனால், சம்பந்தமில்லாத பலரும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரகுநாத், தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவாலை சந்தித்து கடிதம் அளித்துள்ளார். அதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மொத்த அமைச்சரவையில் இருப்போர் அனைவர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன. அதனால், அவர்கள் அனைவரையும் காவல் துறையினர் ஆர்.டி.ஓ.,விடம் அழைத்துச் சென்று சுய நன்னடத்தை ஒப்பம் பெற வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதுகுறித்து, வழக்கறிஞர் ரகுநாத் கூறியதாவது:

குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 110வது விதியின் கீழ், தொடர் குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவோரால், தேர்தல் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகளில் பிரச்னை உருவாகி, அதனால் சட்டம் - ஒழுங்கு சூழல் கெடலாம் என்பதால், தேர்தல் நேரத்தில் தொடர் குற்றம் இழைப்போரை அழைத்து, பொது அமைதிக்கு ஊறு விளைவிக்க மாட்டேன் என உறுதிமொழி ஒப்பம் பெறுவது நடைமுறையாக இருக்கிறது.

ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட இந்த சட்டப் பிரிவை இன்னும் நீக்காமல் வைத்துள்ளனர். அவ்வப்போது, வருவாய்த் துறை அதிகாரியான ஆர்.டி.ஓ., உத்தரவின் பேரில், போலீசார் இதை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், தங்களுக்கு யாரெல்லாம் வேண்டப்படாதவர்களோ, குறிப்பாக எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக இருப்போரை அழைத்து வந்து மிரட்டுவது போல, இப்படியொரு நன்னடத்தைக்கான ஒப்பம் பெறுகின்றனர். பொது அமைதிக்கு பங்கம் வராமல் நடந்து கொள்வேன் என்பது தான் அந்த ஒப்பம் பெறுவதன் நோக்கம். உருவாக்கப்பட்ட நோக்கம் சரியாக இருந்தாலும், அது முழுக்க முழுக்க தவறாக பயன்படுத்தப்படுகிறது. நிகழ் காலத்துக்கு அது தேவையில்லாத நடைமுறை.

போலீஸ் இப்படி தவறாக இந்த நடைமுறையை பயன்படுத்துவதால், பொதுநலவாதிகளாக இருந்து செயல்படும் அப்பாவிகள் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

நடைமுறையோ, சட்டமோ அனைவருக்கும் சமம் என்றால், இதே நடைமுறையை முதல்வர் மற்றும் அமைச்சர்களிடமும் செயல்படுத்தலாமே. இப்படியொரு யோசனை வந்ததும், அதை வலியுறுத்துவது போல கடிதம் தயார் செய்து போய், டி.ஜி.பி., சங்கர் ஜிவாலை சந்தித்து கொடுத்தேன்.

குற்ற வழக்குகள் பதிவும், நிலுவையிலும் இருப்போர் மீதெல்லாம் இந்த நடைமுறையை செயல்படுத்துவோம் என்றால், முதல்வரும், 31 அமைச்சர்களும் இந்த விதிக்கு உட்பட்டவர்கள் தானே. அதனால் தான், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் அளித்திருக்கிறேன்.

தங்கள் மீது என்னென்ன வழக்குகள், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை, முதல்வர், அமைச்சர்கள் தேர்தலின் போது தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

அதையும் இணைத்து, டி.ஜி.பி.,யிடம் கொடுத்ததும் ஆடிப் போய் விட்டார். முதல்வர், அமைச்சர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது என்பது தான், அவருடைய அதிர்ச்சிக்கான காரணம்.

இதே விஷயத்தை வலியுறுத்தி, தேர்தல் கமிஷனிலும் புகார் கொடுத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்