நிறைய எதிர்பார்க்கும் ஈரோடு வாக்காளர்கள்
கடந்த 2023 ஜனவரியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., திருமகன் உடல் நலக்குறைவால் இறந்தார். 10 நாளில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, பிப்., 27ல் ஓட்டுப்பதிவும், மார்ச் 2ல் ஓட்டு எண்ணிக்கையும் நடந்தன.
தி.மு.க., கூட்டணியில் காங்., சார்பில், இறந்த எம்.எல்.ஏ.,வின் தந்தையும், தமிழக காங்., முன்னாள் தலைவருமான இளங்கோவன், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு உட்பட பலர் போட்டியிட்டனர்.
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வின் அனைத்து எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள், அமைச்சர்கள் தொகுதியில் குவிந்து மக்களை குளிர்வித்தனர்.
தி.மு.க., தரப்பில் பட்டி போன்று பல இடங்களில் கூடாரங்கள் ஏற்படுத்தி, அந்தந்த பகுதி மக்களை காலை 7:00 மணி முதல் அடைத்து வைத்து, இரவு 8:00 மணிக்கு மேல் திறந்து விடுவர். அங்கேயே காலை, மதியம், இரவு வேளைக்கு சைவ, அசைவ உணவுகள்; நான்கு முறை நொறுக்குத் தீனிகள் மற்றும் டீ, காபி; இரவு வீடு திரும்பும்போது தலா, 500 ரூபாய் ஆகியவை வழங்கினர்.
தவிர, புடவை, தங்க மூக்குத்தி, தங்கத் தோடு, வெள்ளி கொலுசு, சாக்கு பையிலும், கட்டை பையிலும் மளிகை பொருட்கள், காய்கறிகள், கேரி பேக்கில் சமைக்காத மீன், சிக்கன் வழங்கினர். சில தெருக்களில் வாரத்தில் இரண்டு நாட்கள் குறிப்பிட்ட இடங்களில் உணவு சமைத்து, மக்களை அழைத்து கொடுத்தனர். சராசரியாக ஒரு ஓட்டுக்கு, 5,000 ரூபாய்க்கு மேல் வழங்கினர். இதற்கு ஈடுகொடுக்க அ.தி.மு.க., சார்பிலும் உணவு, புடவை, கொலுசு, பணம் வழங்கினர்.
இவற்றை பார்த்து பக்கத்து தொகுதியான ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி தொகுதி மக்கள் அப்போதே குமுறினர். 'அடுத்த முறை எங்களிடம் ஓட்டு கேட்க வரும்போது, இதே கவனிப்பு வழங்க வேண்டும்' என நேரடியாக கோரிக்கை விடுத்தனர். அதையும் ஏற்றுக்கொண்ட ஈரோடு மேற்கு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான முத்துசாமி, குறிப்பிட்ட கிராம மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், பரிசு பொருட்களை வழங்கினார்.
தேர்தலுக்கு ஓரிரு நாட்களுக்கு முன், 'நாங்கள் வெற்றி பெற்றால், மிகப் பெரிய பரிசு தருவோம்' என ஆசை வார்த்தை கூறி, பெரிய அட்டை பெட்டியில் பாத்திரங்கள், குக்கர் என பல பொருட்களை வீடு வீடாக வழங்கினர்.
தற்போது ஈரோடு லோக்சபா தொகுதி தேர்தலில், அரசியல்வாதிகள் நிறைய பரிசுப் பொருட்களை வழங்குவர் என்ற எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
வாசகர் கருத்து