Advertisement

ஜெய்ராம் - அண்ணாமலை கேள்வி - பதில் சண்டை

'மக்களை ஏமாற்றுவது தான், 'இண்டியா' கூட்டணி கட்சிகளின் திட்டம்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 'சில வாரங்களாக பிரதமர் மோடி, தமிழகத்திற்கு அடிக்கடி செல்கிறார்.

அவர், அம்மாநிலத்தின் மீது சிறிது கவனம் கூட செலுத்தவில்லை. உதாரணமாக, 2023 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, தமிழகத்திற்கு செல்லவில்லை.

'வெள்ள நிவாரணத் தொகையான, 37,907 கோடி ரூபாயை தமிழக அரசு கேட்டும் மத்திய அரசு வழங்கவில்லை' என, தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விடுத்த அறிக்கை:

தமிழகத்தின் பெருமையான, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதற்கு காரணமானவர் ஜெய்ராம் ரமேஷ். அவருக்கு, திடீரென தமிழகத்தின் மீது பாசம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு, தேர்தல் நெருங்கி வருவதே காரணம். கோபுரத்தில் அமர்ந்துள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு, கள யதார்த்தத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழகம் வெள்ள நிவாரணத்திற்கு கேட்ட தொகை, 37,907 கோடி ரூபாய் அல்ல; 15,645 கோடி ரூபாய் தான். இது, லோக்சபாவில், மத்திய நிதி அமைச்சகத்தால் உறுதி செய்யப்பட்டது.

தி.மு.க., அரசு செலவிட்ட மொத்த வெள்ள நிவாரண நிதி, 3,406 கோடி ரூபாய். எனவே, தி.மு.க., அரசிடம், 37,907 கோடி ரூபாய் கோரியது ஏன் என விபரங்கள் கேட்கப்பட்டது.

சென்னையில் வெள்ளத்திற்கு முன், 99 சதவீதம் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்து விட்டதாக தி.மு.க., அரசு கூறியது. வெள்ளத்திற்கு பின், 42 சதவீத பணிகள் முடிந்து விட்டதாக கூறியது ஜெய்ராம் ரமேஷுக்கு தெரியுமா? மக்களை ஏமாற்றுவது தான், 'இண்டியா' கூட்டணி கட்சிகளின் திட்டம்.

தி.மு.க., அரசின் திறமையின்மையால், தமிழகத்தில் விசைத்தறி தொழில் நலிவடைந்து வருகிறது. மின் கட்டணம், 15 சதவீதம் முதல், 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. உச்ச நேர மின் கட்டணம், நிலையான மின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டன.

சமீபத்தில், தமிழக பா.ஜ., இலவச வேட்டி திட்டத்தில், தி.மு.க., அரசின் மிகப்பெரிய ஊழலை அம்பலப்படுத்தியது. ஜெய்ராம் ரமேஷ், உங்களின் கேள்விகளை தி.மு.க.,விடம் கேளுங்கள்.

அடுத்த முறை குறை கூறுவதற்குமுன், பி.எம்.முத்ரா, பி.எம்.இ.ஜி.பி., குறு, சிறு மற்றும் நடுத்தர கடன் உத்தரவாத திட்டங்கள் வாயிலாக, தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள், கடன்களின் விபரங்களை தெரிந்து கொள்ளவும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்