கவர்னர் தமிழிசை ராஜினாமா: தேர்தலில் போட்டி?
தெலங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணைநிலை கவர்னர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தமிழிசை சௌந்தர்ராஜன் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. தமிழக பா.ஜ., சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் விவரம் ஓரிரு நாள்களில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், தெலங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணைநிலை கவர்னர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தமிழிசை சவுந்தர்ராஜன் விலகியுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி அவர், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிடலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, கடந்த ஓரிரு மாதங்களாகவே கவர்னர் பொறுப்பில் உள்ள தமிழிசை மீண்டும் லோக்சபா தேர்தலில் போட்டியிடலாம் என்றொரு தகவல் பரவியது. புதுச்சேரி அல்லது விருதுநகர் என எதாவது ஒரு தொகுதியில் அவர் வேட்பாளராக களமிறங்கலாம் என பா.ஜ., வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தமிழிசை கடந்து வந்த பாதை:
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகளான தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழக பா.ஜ.,வின் முதல் பெண் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். 2014 முதல் 2019 காலகட்டத்தில் தமிழக பா.ஜ., தலைவராக இருந்தார்.
2006, 2011, 2016 ஆகிய சட்டசபை தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டார். 2009ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டார். கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க., துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
2019ம் ஆண்டு தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். அங்கு, ஆளும்கட்சியான பி.ஆர்.எஸ். உடன் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தார். பின்னர், 2021ம் ஆண்டு பிப்.,18ம் தேதி புதுச்சேரி துணைநிலை கவர்னராக நியமிக்கப்பட்டார்.
வாசகர் கருத்து